உப்பு மாங்காய்
சுருக்குப்பை கிழவி. சுருக்கங்கள் சூழ் கிழவி. பார்க்கும் போதெல்லாம் கூடையுடனே குடியிருப்பாள். கூடை நிறைய குட்டி குட்டி மாங்காய்கள். வெட்டிக்கொடுப்பது தான் வேலை. கேட்பது ரெண்டே கேள்விகள். 1. காருவாயா? எட்டணாவா? 2. உப்பா ஒரப்பா? எட்டணாக்கு மூன்று மாங்காய் கேட்டால் ஏறெடுத்து முகத்தைப் பார்த்து விட்டு, மூன்றாவது மாங்காயை வெட்டிக் கொண்டே, மூனெல்லாம் வராது என்று சொல்லும் கறார் கண்மணி. வெட்டிய பாவத்திற்காக உடனே அந்த கத்தியாலேயே உப்பைக் கொட்டிச் சுடச்சுடப் பரிகாரம் தேடும் பாசக்காரி. சின்ன கேட்டை கடந்து அந்த கூடைக் கிழவியைப் பார்த்துப் பழகி விட்டு போனோர் எத்தனையோ? பாட்டித் தொழிலுக்கு ஒரு போட்டி தொழிலோர் இல்லை. நீ சாதாரண பாட்டி அல்ல. எங்கள் எல்லோர் மனதிலும் என்றும் வாழும் என்றும் இளைய இராணிப்பாட்டியே.. ஆம், எட்டு ஆண்டுகள் எங்களை ஆட்சி செய்த இராணி தான். உன் பேரைத் தவிர வேறேதும் தெரியாது. பேர் தெரிந்தால் போதாதா பேரனாக இருக்க... - தஞ்சையின் அரச குமாரன். 21-04-2024