அவன் ஏன் கூலியானான்?

தஞ்சை ஆட்டு மந்தை தெருவின் ஓரத்தில் இருந்தது அந்த ஓலைக் குடிசை. அப்பா கோவிந்தராஜ், அம்மா தனலட்சுமி மற்றும் அவர்கள் பெற்ற ஆறு குழந்தைகளின் உலகம் அது.
முத்துப்போலப் பிறந்த ஆறு பிள்ளைகளில், சந்துருதான் கடைசி. அவனுக்கு நான்கு அண்ணன்களும், ஒரு அக்காவும் இருந்தனர்.


அப்பா வலுவிழக்க, குடும்ப வறுமையின் அனல் தணிக்க, தனலட்சுமி அம்மா விடியற்காலை 4 மணி முதலே தஞ்சை ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி வாசல் கடையில் இடியாப்பம் விற்று, குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

மூத்த பிள்ளைகள் எப்படியோ படித்து, அவரவர் வேலைகளில் அமர்ந்து, தங்கள் குடும்பங்களை  மட்டுமே கவனிக்க அவர்களுக்கு வருவாய் கிட்டியது. சிலருக்கு பொருள் இருந்தும் மனமில்லாது போனது.
இளையவனான சந்துரு அந்த காலத்து பத்தாம் வகுப்பு அதாவது OLD SSLC வரை படித்திருந்தான். மேற்கொண்டு  நல்ல வேலைக்குக் காத்திருக்க அவனால் முடியவில்லை. முதுமையிலும் பெற்றோர் படும் கஷ்டம் அவன் தூக்கத்தை அசைத்துப் பார்த்தது.


அலுவலக வேலைக்குப் போக, சட்டை சுத்தமாக இருக்க வேண்டும். டை கட்டி, காலணி அணிய வேண்டும். அதற்கெல்லாம் அவன் தயார் இல்லை. அதற்கான நேரம் இல்லை. அவன் தேடியது, உழைப்பின் உடனடிப் பலன்!

வீதியெங்கும் அலைந்து, பழைய சாமான்கள் கடையில் வாடகைக்கு எடுத்தான், வலுவான ஒரு தட்டு வண்டியை.

வெள்ளைச் சட்டை போட்ட அண்ணன்கள் வேலைக்குப் போகும் வேளையில், சந்துரு அழுக்குச் சட்டையுடன், தன் தோள்களை வண்டியின் பாரத்தில் சாய்த்தான். பாரம் ஏற்றியும், இறக்கியும் அவன் தோள்கள் சிவந்தன. வெயில் அவனது உடலை வாட்டியது. சந்துருவின் கனவு, ஒரு பெரிய நிறுவனத்தின் மேலாளர் பதவியாக இல்லை; இன்று இரவு அம்மாவின் பசிக்கு ஒரு கவளம் சோறாக இருக்க வேண்டும் என்பதே!

முதல் நாள் சம்பளத்தில், அம்மாவிற்கு மருந்தும், உடம்புக்குச் சத்தான சில பொருட்களும் வாங்கி வந்தான். மகனின் அழுக்குப் படிந்த சட்டை, வீங்கிய கைகள் ஆகியவற்றைக் கண்ட தனலட்சுமி, "ஐயோ, என் சந்துரு கூலியா போயிட்டியே!" என்று கதறி அழுதார்.

சந்துரு சிரித்தான். "நான் கூலியாகலைம்மா. உன் உழைப்பைத் தாங்கிக்க ஒரு ஆளா மாறி இருக்கேன்! இனி, அதிகாலை நாலு மணிக்கு நீ எழுந்து இடியாப்பம் பிழிய வேண்டியதில்லை. அந்த உழைப்பை நான் இழுக்கிற இந்த வண்டிக்குக் கொடுத்திடுறேன்!" என்றான்.

அந்த வீட்டின் மற்ற தூண்கள் தங்கள் சொந்தச் சுவர்களைத் தாங்கின. ஆனால், ஆறாவது தூணான சந்துரு, அக்குடும்பத்தின் மொத்தப் பாரத்தையும் தன் ஒற்றைத் தோளில் சுமந்தான்.

சந்துருவின் இந்தத் தியாக உழைப்பால், தனலட்சுமி அம்மாவும் அப்பா கோவிந்தராஜும் தங்கள் இறுதிக் காலத்தை நிம்மதியுடனும், பெருமையுடனும் கழித்தனர்.

காலம் அதன் கதையைத் தொடர்ந்தது.

சந்துரு கூலியாகவே வாழ்ந்திருந்தாலும், தன் பெற்றோருக்காக அவன் உழைத்த நேர்மை, அவனது பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியாக மாறியது. அந்தத் தியாகத்தைப் பார்த்து வளர்ந்த சந்துருவின் பிள்ளைகள், தந்தையின் கஷ்டத்தை வீணாக்கவில்லை.
இறுதியில், சந்துருவின் பிள்ளைகள் அனைவரும் சமூகத்தில் நல்ல நிலையை அடைந்தார்கள். இருப்பினும் பிள்ளைகளுக்கு நாம் பாரமாக இருக்கக் கூடாது என்று சந்துரு தொடர்ந்து தன் உடலில் பலம் இருக்கும் வரை வேலை செய்து வந்தார்.

பத்தாவது படித்து விட்டு வண்டி இழுப்பதன் தியாகத்தை உணராதோர் எள்ளி நகையாடுவதும் பரிதாபப் படுவதும் இயற்கையான ஒன்றே.

பெற்றோரின் கடைசி நாட்களை மகிழ்விக்கவும், தன் உழைப்பால் வறுமையை விரட்டவும், ஓர் அலுவலக கௌரவத்தையும், பதவியையும் உதறித் தள்ளிய சந்துரு, உண்மையில் கூலியல்ல; அவன் தான் அந்த குடும்பத்தின் போர் வீரன்!

தஞ்சையின் அரச குமாரன்.
28 அக்டோபர் 2025


Comments

Popular posts from this blog

தீபம் பிளக்ஸ்

காது புடி வாத்தியார்

தட்டு வண்டியில் காளிக்கோயில் - சிறுகதை