தட்டு வண்டியில் காளிக்கோயில் - சிறுகதை

        கந்தன் வேலைக்குச் சென்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பி இருந்தான். காளிக் கோயிலைத் தாண்டி தான் அவன் வீட்டை அடைந்தாக வேண்டும்.  கோயிலைக் கடக்க முற்பட்டப் போது அக்கோயிலில் எஞ்சி இருந்த சில பழைமை மாறாக் காட்சிகள் அவனுக்கு அவனது பால்யத்தைத்  திரும்பி தந்தன. 

        எட்டாவது வகுப்பு தொடங்கிக் கல்லூரி சேர்ந்த சிறிது நாள் வரை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என அட்டவணைப்  போட்டு வாரந்தவராது அந்த காளி கோயிலுக்கு சென்றவன் அவன். அவ்வளவு பக்தியா என அவசரப்பட்டு கந்தனுக்கு அதிக மதிப்பெண்களை அள்ளிப் போட்டு விட வேண்டாம். கடவுள் மறுப்பை, பெருமை என அவன் கர்வம் கொண்ட காலம் அது.

       பிறகு எதற்குபூக்கார அம்மா பிரேமாவின் பூக்கடைக்கு தேவையான சாமான்களை,  அவர் வீட்டிலிருந்து காளிக் கோயில் வரை, எடுத்துக் கொண்டுச் சேர்க்க, அவன் பெறும் ரூ.10 கூலிக்காக. பத்து என்பதெல்லாம் அப்போது அவனுக்கு மிகப் பெரிய எண். அதை வைத்து இரண்டு நாள் காலை இரவு சிற்றுண்டியை முடித்து விடலாம். "காலேஜ் படிக்கிற பையன் தட்டு வண்டி இழுக்கக் கூடாது" என அப்பா தனது தட்டு வண்டியைக் தர மறுத்த போது தான் வண்டி இழுப்பதை நிறுத்தினான். 


தட்டு வண்டி

            செங்கற்களை மாற்றி அடுக்கி, தான் சம்பாதித்த முதல் கூலி  ரூ.2 இதே இடத்தில் தான் என்பதை எண்ணி மனதால் மண்ணைத் தொட்டான். கோயில் நுழைவுக்குப் பக்கத்தில் நாற்காலியில் ஆங்கில செய்தித் தாள் படிக்கும் வசீகர மீசை வைத்த குண்டு பெருசை, ரொம்ப நாள் மிலிட்டரி என நினைத்து ஏமாந்து பின் இன்ஜினியர் என அறிந்து ஏமாந்ததை ஆசையாய் அசை போட்டு அசடு வழிந்தான். ஒருமுறை தன் அப்பா குடித்து விட்டு வீட்டை விட்டு அம்மாவைப் போக சொன்ன போது இரவு 12 மணிக்கு காளிக்கோயில் வந்து அம்மாவுடன் கும்பிட்டு விட்டு ஊர் சென்ற நினைவை எவ்வளவு தடுத்து நிறுத்தியும் அவனால் முடியாது தவித்தான்.

             

             கோயில் முகப்பு 


                                                      கோயில் மண்டபம் 

                

பிரேமா அம்மா பூக்கடை

                சிறுவயது காலங்களில் மார்கழி மாத காலங்களில் பிரம்ம முகூர்த்தத்திலேயேக் கோயிலுக்குச்  சென்று அங்கே தரப்படும் சர்க்கரைப் பொங்கலுடன் சண்டை செய்தவன் அவன்.  பூரண (பௌர்ணமி)  நாட்களில் மதியம் காளிக் கோயில் அன்னதானங்களில் கலந்து கொண்டு, இல்லை இல்லை "கலந்து உண்டு" விழாவை தவறாது சிறப்பித்துக் கொடுக்கும் இராச குமாரன் அவன். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது தவறாது கோயிலுக்குச் சென்று அங்கே கொடுக்கப்படும் செங்கரும்பை இருமுறை மும்முறைப் பெற்று வீடு சேர்ப்பதை எல்லாம் வீரம் என எண்ணிக் கொண்டு இல்லாத மீசையை தொந்தரவு செய்தவன் அவன். சாமிக்குத் தெரியாமல் சிலை அருகில் இருக்கும் காரூவா, எட்டணா, யாகத்தில் உடன்கட்டை ஏறிய கருப்புக் காசுகளைத் தரையில் தோய்த்து பெட்டிக் கடைக்குக் கப்பம் கட்டிய "மிட்டாய் மிராசு" அவன்.

            

            அவனுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அவன் ஓடி ஆடி விளையாடியது எல்லாம் இந்த வட பத்ர காளிக் கோயிலில் தான். பம்பரம், பளிங்கி, ஆபியம் மணியாபியம், பெப்பே, செதுக்கு சில்லு என அவன் கால் படாத இடமே இல்லை. கோயில் மேற்கூரையையும் விடாது, பந்து எடுக்க, பட்டம் எடுக்க என அவன் கால் வைத்து மிதித்து ஏறாத கோயில் சிலையும் இல்லை. பார்க்க பார்க்க அவன் மனது அவனை ஏதோ செய்தது. அதே பூக்காரம்மா இன்றும் அங்கே கடை போட்டிருந்தார். கதம்பமும், நெய் விளக்கும் அதன் வாசனைக் கொண்டு வருடி அவனை கிறங்கச் செய்தன.

                அப்படியே காளிக் கோயிலின் விகாரத்தின் உள்ளே சென்றவன், அந்த வட பத்ர காளியம்மனை நெருங்க நெருங்க அவனை அறியாது அவன் குழந்தை ஆனான். முன்பெப்போதும் இல்லாத ஒரு வகையான உணர்ச்சிமிக்க பேருணர்வு. ஒரு கணம் அவன் தன் உறவுகளை மறந்தான்,  உலகை மறந்தான், உயிரை  மறந்தான். நாடி நரம்பெல்லாம் மின்சாரம் பாய்வதை போல் உணர்ந்தான். அவன் கண்கள் மூடின. அவனை அறியாமல் கைகள் மேல் கூப்பிச் சென்றன. கனமான கண்ணீர் துளிகள் கீழிறங்கி அவன் மார்பை நனைத்தன. " அம்மா! காளியம்மா!! உன்ன தேடி வந்துடேம்மா!!! என்ன பாத்துக்கம்மா!!!!"  என்றவாறே விகாரத்தின் நடுவே நின்று ஓங்கி கத்தினான். 


                                    
                                                    கோயில் விகாரம்


                                                       
                                 நிசும்பசுதனி என்கிற வடபத்ர காளியம்மன்



- தஞ்சையின் அரச குமாரன். 

30 - 05 - 2023

Comments

Post a Comment

Popular posts from this blog

பிரேமாவின் பெண் குழந்தை

தீபம் பிளக்ஸ்