கந்தன் வேலைக்குச் சென்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பி இருந்தான். காளிக் கோயிலைத் தாண்டி தான் அவன் வீட்டை அடைந்தாக வேண்டும். கோயிலைக் கடக்க முற்பட்டப் போது அக்கோயிலில் எஞ்சி இருந்த சில பழைமை மாறாக் காட்சிகள் அவனுக்கு அவனது பால்யத்தைத் திரும்பி தந்தன. எட்டாவது வகுப்பு தொடங்கிக் கல்லூரி சேர்ந்த சிறிது நாள் வரை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என அட்டவணைப் போட்டு வாரந்தவராது அந்த காளி கோயிலுக்கு சென்றவன் அவன். அவ்வளவு பக்தியா என அவசரப்பட்டு கந்தனுக்கு அதிக மதிப்பெண்களை அள்ளிப் போட்டு விட வேண்டாம். கடவுள் மறுப்பை, பெருமை என அவன் கர்வம் கொண்ட காலம் அது. பிறகு எதற்கு ? பூக்கார அம்மா பிரேமாவின் பூக்கடைக்கு தேவையான சாமான்களை, அவர் வீட்டிலிருந்து காளிக் கோயில் வரை, எடுத்துக் கொண்டுச் சேர்க்க, அவன் பெறும் ரூ.10 கூலிக்காக. பத்து என்பதெல்லாம் அப்போது அவனுக்கு மிகப் பெரிய எண். அதை வைத்து இரண்டு நாள் காலை இரவு சிற்றுண்டியை முடித்து...
Comments
Post a Comment