தீபம் பிளக்ஸ்
கோடை விடுமுறை
தஞ்சாவூர் கீழவாசல் குணங்குடிதாசனில் பால் சர்பத் விலையை 12 லிருந்து 15 ரூபாயாக உயர்த்தி இருந்தார்கள். கார்த்திகைச்செல்வன் அப்போது தான் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதி முடித்திருந்தான். ஒரு வாரம் கூட கடக்க வில்லை. அவனுக்கு அவ்வளவு போரடித்தது. கல்லூரி சேரும் வரை, தனக்கு எப்படியாவது ஒரு வேலை வாங்கி தரும்படி தன் அப்பாவிற்கு அழுத்தம் கொடுத்தான். பரீட்சை முடியும் வரை படிக்க வேண்டும் என்ற ஒரு வேலை இருந்தது. பரீட்சை முடிந்தவுடன் என்ன செய்வதென்று அவனுக்கு புரியவில்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடிந்த பின்பு தான் இந்த பிரச்சனை வரும். அதற்கு முன்பு வரை அடுத்த ஆண்டு இதுதான் படிக்கப் போகிறோம் என்ற ஒரு தெளிவு இருக்கும். கிடைக்கும் பழைய புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்திருக்கலாம்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் பரிதாபங்கள்
அன்று மாலை அவனது அப்பா வீடு திரும்பும் போதே "நாளை என்னுடன் வா, உன்னை ஓரிடத்திற்கு அழைத்து செல்கிறேன். ஆபீஸ்ல வேலை. கம்ப்யூட்டரெல்லாம் இருக்கும்" என்றார். கம்ப்யூட்டரா? ஹையா தன் வாழ்க்கையில் விண்டோஸ் வழியாக தென்றல் வீசப் போகிறதே!! மாக்கானுக்கு மேக்கா!!! என்று பேருவகை கொண்டான். அதே சமயம் லைட் இறுமாப்புடன் நம்மலோ கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பு! எப்படியும் தட்டி தூக்கிடலாம் என்று கம்ப்யூட்டர் லேப் பிராக்டிக்கலில் முழு மதிப்பெண் பெற்றதை எல்லாம், என்னமோ A4 ஷீட்டில் பேக் அண்ட் பேக் சரியாக பிரிண்ட் கொடுத்த அளவுக்கு பில்டப் ஏற்றிக்கொண்டான். கண்ட்ரோல்+வி, கண்ட்ரோல்+சி இதை தெரிந்து கொள்ளவே அவனுக்கு 12 வருடம் பிடித்திருந்தது. Fibonassi சீரியஸ் ப்ரோக்ராமை மனப்பாடம் செய்ய அரும்பாடுபட்டு, அவுட்புட் வர அவன் செய்த அலம்பல் கோமதி டீச்சருக்கு கோமா வந்தாலும் மறக்காது. தரவுத்தள மேலாண்மை அமைப்பு (DBMS) என்று தூய தமிழில் இப்படியும் ஒரு பாடம். ஒரே ஆறுதல் 75 ஒரு மார்க் கேள்விகள். பள்ளியில் மொத்தம் ஆறு பழைய டிவி சைஸ் கம்ப்யூட்டர்கள். அதிலும் இரண்டு கம்ப்யூட்டர்கள் அப்பப்ப வேலை செய்யாது. வகுப்பில் அம்மன் பேட்டையில் இருந்து ஒரு பையன் வருவான். காண்டேற்றும் கணேஷ். ஓரளவுக்கு கம்ப்யூட்டர் தெரிந்தவன் அவன் தான். கம்ப்யூட்டர் லாபில் அவனுக்குத்தான் எப்பொழுதும் முன்னுரிமை. அதுக்கு அவன் போடும் சீன் இருக்கே! ஷப்பா முடியாது.
சீட்டு போராட்டம்
அவனும் சிரமப்பட்டு தான் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பை எடுத்திருந்தான். அவ்வளவு மவுசு அந்த குருப்புக்கு. அரச குடும்பம் நிர்வகிக்கும் அந்த பள்ளியில், "வேண்டுமானால் பயாலஜி குரூப் எடுத்துக்கோங்க. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிந்துவிட்டது" என்று சொன்ன போதே அவனுக்கு அல்லு இல்லை. பயாலஜி என்றால் படம் நிறைய வரைய வேண்டும். அத்துடன் சுவாலஜி, பாட்டனி என இரண்டு பேப்பர்களையும் ஒரே பரிட்சையில் எழுதி முடிக்க வேண்டும். வாய்ப்பே இல்லை என்றெண்ணிய மகன் தவிப்பை போக்க, அப்பா வழி தேடினார். உடனே அங்கே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருந்த வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டைக்காரர் ஒருவரை நோக்கி அப்பா விரைந்தார். 9வது வார்டு கவுன்சிலர் பாலு அவர்கள். அப்பா நிலைமையை எடுத்துக் கூறினார். அவர் போயி தலைமையாசிரியர் திரு. பன்னீர்செல்வம் (நல்லாசிரியர் விருது) அவர்களிடம் கேட்டுக் கொண்டார். உண்மையில் அவர் பரிந்துரையின் பேரிலேயே கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் செல்வனுக்குக் கிட்டியது.
ஆத்துப்பாலம்
தஞ்சை நெஞ்சை கொஞ்சும் வாஞ்சையான ஊர். கீழவாசலில், கிடைக்காத பொருளில்லை என்றால் மேல வீதியில் கிடைக்காத அருளில்லை, அவ்வளவு கோயில்கள். தெற்கு வீதி எலக்ட்ரிக் ஹப் என்றால் வடக்கு வாசல் வான்டட் லிஸ்ட் என்பார்கள். இது இப்படியிருக்க போட்டோ, வீடியோ எடிட்டிங் மற்றும் லோக்கல் சேனல்களுக்கு என்று நேந்து விட்ட இடந்தான் அந்த ஆத்துப்பாலம்.
நாளைக்கு சேரப் போகும் வேலையை நினைத்து முதல் நாள் தூக்கம் வராவிடினும், அவன் காலை வழக்கம் போல் எழுந்து வேலைக்கு தயாரானான். புது வகுப்புக்கு செல்லும்போது ஏற்படும் அதே பரவசம். அப்பாவும் மகனும் ஆத்துப் பாலத்திற்கு வந்தார்கள்.
தீபம் பிளக்ஸ்
தீபம் கலர்லேப், தீபம் பிளக்ஸ், தீபம் ஜெராக்ஸ் - இதில் ஒன்றையாவது தஞ்சாவூர் வட்டத்தில் நிச்சயம் கேள்விப் பட்டிருப்பார்கள். அப்பா, செல்வனை பூட்டியிருந்த ஒரு ஷட்டர் அருகில் உட்காரச் சொன்னார். ஏற்கனவே அங்கு சிலர் கடை திறக்க காத்து இருந்தனர். அவர்கள் கஸ்டமரா, ஆபீஸ் ஸ்டாப்ஸா தெரியவில்லை. அது தான் தீபம் பிளக்ஸ்.
பூக்காரம்மா ஒரு நெகிழி பையுடன் கதம்பத்தை ஷட்டர் கைப்பிடியில் வைத்து விட்டு போனார். அஜந்தா நேரம் நெருங்கும் தருவாயில் வடக்கூர் வடக்கில் இருந்து வந்தார் மேலாளர் ராமராஜன். உட்கார்ந்திருந்த அனைவரும் அவரையேப் பார்க்க, அவரும் சிரித்துக் கொண்டே சாவியால் ஷட்டர் பூட்டுடன் சண்டை செய்தார். விறுவிறுவென கூட்டி சுத்தம் செய்தார்கள். தண்ணிக் கேனை சாய்த்தார்கள். நறுக்கிய கதம்பமோ சாமி படங்களின் ஆணி, பிரின்டிங் மெஷின், கம்யூட்டர் மானிட்டர், கல்லாப்பெட்டிகளைச் சென்றடைந்தன. அப்பா மேலாளரிடம் முணுமுணுக்க, ஓனர் வரும்வரை காத்திருக்க சொன்னார்கள். அவனுக்கோ இன்பம், மேலாளருக்கு ஒன்று, டிசைன் செய்ய நான்கு, பிரின்டிங்குக்கு ரெண்டு என மொத்தம் 7 கணினிகள். அட எண்ணிக்கையை விடுங்கள், அத்தனையும் வேலை செய்கிறதே, வேறென்ன வேண்டும். மேலும் அங்கே பச்சை கலரில் விட்டு விட்டு எரியுமே, அதாங்க உலகத்தை ஆட்டிப் படைக்கும் இன்டெர்நெட், இன்பத்தின் உச்சம். ஊழியர் ஒருவர், சிஸ்டெத்தை எல்லாம் துடைத்து விட்டு வுஃபெரில் சாமி பாட்டை போட்டு விட்டார். பயபக்தியுடன் வேலையைத் தொடங்குறாராம், நம்புவோம். அஞ்சு நிமிசம் ஆகியிருக்கும், அயிட்டம் சாங் ஒன்றை வைத்து விட்டு ஒலி அளவைக் குறைத்துக் கொண்டார். காத்துக்கொண்டிருந்த இருவர் ஒரு துண்டு சீட்டுடன் டிசைன் செய்ய அவரருகே அமர்ந்து கொண்டனர்.
முதல் நாள் - முதல் பல்பு
ஓனர் என்றவுடன் வயதான ஒருவர் தான் வருவார் என எண்ணிக்கொண்டிருந்த செல்வன் ஒரு கணம் திகைத்தான். கடையின் உரிமையாளர் திரு. ஆனந்த் அவர்கள் வயது முப்பதை தாண்டிருக்கவில்லை. சுறுசுறுப்பானவர். ஆபீஸில் நுழைந்தவுடனே டிசைன், பிரின்டிங், ப்ரெண்ட் டெஸ்க் என எல்லாம் பகுதிக்கும் சென்று நிலையைக் கணக்கிட்டுக் கொண்டார். செல்வனின் அப்பா, அவருக்கு ஒரு வணக்கத்தை வைத்தார். தன் மகன் கார்த்திகைச்செல்வன் என அறிமுகம் செய்து வைத்தார். தம்பி, பரீட்சை எப்படி எழுதியிருக்க? என்று கேட்டுக்கொண்டே பிரின்டிங் ரூமுக்கு உள்ளே போவோம் என சைகைத்தார். பாத்துங்க, நான் போயிட்டு வரேன் என்று சொல்லி அப்பா தன் வேலையைச் செய்ய கிளம்பினார். குளிரூட்டப்பட்ட அறை, ஒரே இன்க் வாடை, உள்ளே பிரிண்டர் ரமேஷ் இருந்தார். கம்யூட்டர் எல்லாம் ஆபரேட் பண்ண தெரியுமா? என்றார். ஹ்ம்ம், நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் தா அண்ணே, எல்லாம் நல்லா தெரியும் என்றான். அவனை சீட்டில் அமரசெய்து, கம்யூட்டரில் முதலில் ஒரு விண்டோவை க்ளோஸ் செய்ய சொன்னார். அவனும் கர்சரை கன்ட்ரோல் செய்ய முடியாமல் களத்தில் போராடினான். ஓவர் பில்டப் வேற போட்டுட்டோமே என்றெண்ணிக் கொண்டே, இப்படி பின்னாடி பக்கத்துல நிக்கிறதுனால செய்ய முடியல என்றான். அவரும் சிரித்துகொண்டே அதுனால தான் பண்ண முடியல.. இல்ல.. என்றார். படிப்பு வேற அனுபவம் வேற என அவன் உணர்ந்த முதல் தருணம். ரமேஷ் இவனுக்கு கொஞ்சம் பிரிண்டிங் சொல்லி குடுடா.. என்று ஓனர் சொன்ன போது தான் செல்வனுக்கு முகம் மலர்ந்தது. ரமேஷ் அண்ணனும், சரி இந்த பிலக்ஸ முதல்ல மடி என்றார்.
ஆயிரத்தி ஐநூறு சம்பளம். வெகுசனத்துடன் உறவாட ஆகச்சிறந்த இடம் தீபம் பிளக்ஸ்.
ஓனரின் நல்லுள்ளம்
OT க்கு தனிக்காசு, சாப்பாடோடு. ஞாயிறு என்றால் வேலைப்பார்க்கும் அனைவருக்கும் தேவர்ஸ்ல சிக்கன் பிரியாணி, அநேக புதுப்படங்களுக்கு அழைத்து செல்வது, குன்னூர், மதுரை அதிசயம் என டூர் ஏற்பாடு, ஆயுத பூஜை போனஸ் என உழைக்கும் மக்களுக்கு உள்ளத்தால் எல்லாவற்றையும் செய்தார் அவர். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஊழியர் எவரிடத்தும் அவர் மரியாதை குறைவாக பேசியதுமில்லை, நடந்ததுமில்லை. அதனால் தான் என்னவோ ஊழியர்களும் வேலையை இழுத்துப் போட்டு செய்தார்கள்.
டிசைனர் பிரபு
செல்வன், பிரிண்ட் ஆகி வெளிவந்த பிலக்ஸை மடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சின்னப் பையன், பிரின்டிங் ரூம்க்கு உள்ளே நுழைந்தான். யாரும் எதுவும் சொல்லில்லை. பத்தாவது லீவில் வேலைக்கு வந்திருப்பான் என்று எண்ணிய வேலையில் அவனும் 12th ஐ முடித்து விட்டானாம். பிரின்டிங்கில் வேலைக்குச் சேர்ந்த கார்த்திகைச் செல்வனுக்கு இது ஆச்சர்யம், அதிசயம். சொன்ன இடத்தில கிளிக் செய்யவே கிலியடித்த அவனுக்கு கெத்துக் காட்டினான் பிரபு. டிசைன் செய்வது சிற்பத்தை செதுக்குவது போல என, கீ போர்டு உடைய, அது உரல் சத்தம் தான், விரல் சத்தம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு சத்தத்தோடு டிசைன் செய்வான். அவ்வளவு வெறி மாப்ளக்கி... உண்மையில் வேகமாக டிசைனை முடித்து விடுபவன். டிசைன் வேலை இல்லாத நேரத்தில் ஃப்ளெக்ஸ் மடிக்க கூப்பிட்டால், நான் யார் தெரியுமா? என்ன போயி... என்று சொல்லும் ஒரிஜினல் டிசைனராக அவன் மாறியிருந்தான். ஆனால் அது சில காலம் கூட நீடிக்க வில்லை. ஒத்த வயதினர் என்பதால் இருவரும் விரைவில் ஒட்டிக் கொண்டார்கள்.
இராக்கூத்து
வேலை நேரம் மாலை 6.30 முதல் இரவு ஒன்று வரை. இரவு உணவு, டீ கம்பெனி வழங்கும். அவன் கல்லூரி நேரம் மதியம் 2ல் இருந்து 6 வரை. கரந்தை தமிழவேல் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில் இருந்து பலோபநந்தவனம் வழியே கீழவாசல் பூமாத்தான் (பூமாலை ராவுத்தர்) கோயில் தெரு கடந்து பிள்ளையார் கோவில் வார்க்காரத் தெருவில் உள்ள அவன் வீட்டிற்கு வந்து ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு, பாம்பாட்டித் தெரு, லாலி ஹால் கடந்து, சுற்றுலா மாளிகை ஒட்டிசெல்லும் புது ஆற்றின் அந்திக்காற்றை அனுபவித்து, ஆத்துப்பாலம் திரும்பி வந்து ஆபீஸ் அடைய அவனுக்கு மாலை 6.40 பிடிக்கும். இரவு 9 மணி வரை நம்ம மேலாளர் ராமராஜன் அவர்கள், தம்பி செல்வனிடம் இருப்புத் தொகை, இன்னும் பிற தகவல்களை தருவதோடு நிறுத்திக் கொள்ளாமல், என் கண்ணையே ஒன்கிட்டத்தான் வுட்டுட்டு போறேன் என்கிற அளவுக்கு ஒரு லுக்கையும் விட்டு, வடக்கூர் வடக்கு வழிப் பார்த்து வண்டியை ஸ்டார்ட் செய்வார். அதன்பின் நம்ப செல்வன் தான் குட்டி மேனேஜர்.
அது ஒரு பிளக்ஸ் கடை என்பதால், திருமண நாட்களிலும், அரசியல் மாநாடுகளில் போதும், புது திரைப்படம் வரும் நாட்களிலும் இரவு ஜே ஜே என்று கூட்டம் இருக்கும். எப்படியும் மாதத்தில் பத்து நாட்களாவது விடிய விடிய வேலை இருக்கும். இரவு 9 மணி வாக்கில் ஒரு கூட்டம் கலையும். பகல் ஊழியர்களுக்கு பணி நிறைவு நேரமது. மணி 10 ஐ நெருங்கும் போது இரவு உணவு பார்சல் வாங்க தயாராவார்கள். ஒருவருக்கு தோராயமாக ரூபாய் 25 கணக்கு. அதிக பட்சம் இந்த மூன்று கடைகளுக்கு தான்.
1. சுப்பையா டிபன்ஸ் (அப்போது ரயிலடிக்கு முன்னே, பூக்கடைகளுக்கு நேரெதிரே இருந்தது) - தோசையும் ஆறு வகை சட்டினியும் இங்கே சிறப்பு. உட்கார்ந்து சாப்பிடவோ, பார்சலோ கால்மணி நேரமாவது கட்டாயம் சர்வாங்காசனம் செய்ய வேண்டும். அவ்வளவு கூட்டமாக இருக்கும். பார்சல் கட்டுபவர்க்கு 2 ரூபாய் டிப்ஸ் கொடுக்கும் பழக்கமும் இருந்தது.
2. அபிராமி பவன், திருவையாறு பஸ் ஸ்டாண்டு (பழைய பஸ்ஸ்டாண்ட் எதிர்ப்புறம், வெஜிடபிள் தோசை ஃபேமஸ்)
3. பர்மா காலனி கவ்சா (எண்ணெய் முட்டை, பொடி போட்டு, வாழைத்தண்டு சூப்)
எல்லாம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் மெத்தனம் ஆகும் வேலையில் கிட்டத்தட்ட இரவு 11.30க்கு ரெகுலர் தாத்தா ஒருவர் சைக்கிளில் டீயும், மினி பொட்டிக்கடையும் வைத்து கொண்டு வருவார். அவ்வளவு சாந்தமான முகம், அதிகம் பேசமாட்டார். டீக்கு கம்பனி பொறுப்பு. டீக்கு மட்டும். தீனியோ, சிகரெட்டோ அவரவர் பார்த்துக் சில்லரையை சரி செய்து கொள்ள வேண்டியது. 1 மணிக்கு மேல் வேலை இருந்து பார்த்தால் நிச்சயம் OT கிடைக்கும்.
செல்வனோடு இரவு வேலை பார்த்தவர்கள் பெரும்பாலும் சில்வண்டுகள். யார் வயதும் அப்போது 20 ஐ தாண்டியிருக்கவில்லை. அவர்கள் மோட்டார் சைக்கிள் கற்றுக்கொண்டதே வரும் கஸ்டமர்களிடம் வண்டியை இரவல் வாங்கித்தான். ஒருமுறை இரவல் வாங்கிய வண்டியில் அடித்து அடித்து ஏற்கனவே வெல்டு வைத்த கிக்கர் உடைய, இரவு மூணு மணிக்கு வண்டிக் காரத் தெருவில் தூங்கிக்கொண்டிருந்த அண்ணனை எழுப்பி வெல்டிங் வைத்து எதுவும் சொல்லாமல் கஸ்டமர் கேர் செய்தார்கள்.
சப் வுஃபெரில் கும்மு கும்மூ என்று பாட்டு வைத்து கேட்டுக்கொண்டு தான் வேலை செய்வார்கள். சில நாட்களில் சீக்கிரம் வேலை முடிந்தும் வீட்டுக்கு போக மாட்டார்கள். ஷட்டரை சாத்திக்கொண்டு உள்ளே குத்து பாட்டுக்கு டைல்ஸ் அதிர ஆட்டம் போடுவதோ, Project IGA & Counter strike போன்ற off-line நெட்வொர்க் கேம்ஸ் விளையாடித் தீர்த்தோ அல்லது தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் டோரண்ட் கூட்டாளியோடு திருடிய படத்தைப் பார்த்துக்கொண்டோ காலையின் முதல் கஸ்டமர் சூரியனுக்காக பொறுத்திருப்பர்.
ஓ விடிந்தவுடன் வீட்டுக்கா? என்று ஒருக்காலும் ஒரு ஓரத்தில் கூட எண்ணி விடாதீர்கள். அவர்களின் அடுத்த ஸ்பாட் அன்னை சத்யா ஸ்டேடியம். நீல நிற ஸ்டம்ப்ஸ், well finished Gunn & Moore பேட் (அட அதாங்க நம்ம GM பேட்), வெயிட்டான விக்கி சிவப்பு பந்து என எல்லாத்தையும் கட்டிகிட்டு, சரியா தூங்காம இளமையின் வேகத்தில் 9 மணி வரை பீட்டென் கிரிக்கெட் ஆடிட்டு, வெளியே இருக்கும் தர்பூசணி கடையில் வயிறு நிறைய தின்று மகிழ்ந்தனர். பின் எல்லாரும் அண்ணா சிலை மட்டும் ஒன்றாய் வந்து சாயந்திரம் பாப்போம் என்றுரைத்து தத்தம் வீடு நோக்கி சற்று ஓய்வெடுக்க பயணித்தார்கள். தினமும் இதே இராக்கூத்து தான்.
கண்ணண்ணன்
கண்ணன் அண்ணன் ஒருவரை கரெக்ட் செய்வதில் மன்னன். ஒரு மனிதன் தன் சக மனிதனை எந்த அளவுக்கும் கரெக்ட் செய்ய முடியும் என்பதற்கு இக்கண்ணன் அண்ணன் ஒரு உதாரணம். டிசைனர் அவர். மக்கள் அவரிடம்தான் டிசைன் செய்வேன் என்றும் அடம் பிடித்ததும் உண்டு. ஒரு கஸ்டமர் அவருக்கு புளி கொண்டு வந்தால், இன்னோவருவர் பருப்பு மூட்டை கொண்டு வருவார். ஒரு டிசைன் முடித்து விட்டு கஸ்டமரோடே சென்று பில் போட்டுவிட்டு அவர்களுடனே சென்று ஹோட்டலில் சாப்பிடுமளவுக்கு நங்கூரம் போல நச்சென்று கஸ்டமர் கேர் செய்வார். என்னையா! தம்பி என்று சொல்லும் அவர் குரலில் உள்ள ஒரு காந்த சக்தி, நம்மை மறுப்பு தெரிவிக்க முடியாது தடுக்கும். ராசா, உன் கையால கொஞ்சம் தண்ணிக்கொடுயா என்று வாஞ்சையாடினால் யாரால் நோ சொல்ல முடியும்.
பிரிண்டர் ரமேஷ்
ரமேஷ் அண்ணன் அதிகம் படிக்காவிடனும் Technical நாலேஜ் உள்ளவர். Printing division head. ஒரு சமயம் கேரளாவில் இருந்து வந்த சர்விஸ் இன்ஜினியர்ஸ் ரெண்டு பேரை கதறவிட்டவர். பிளக்ஸ் மெஷினை சரி செய்ய வந்தவர்கள் இவரிடம் டிப்ஸ் கேட்டுக் கொண்டு, தொலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்டு போனார்கள். தலைவர் டவுன்லோட் செய்து முயற்சி செய்யாத சாஃப்ட்வேரே கிடையாது. யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். காரணம் அவர் எந்நேரமும் போட்டிருக்கும் ஹான்சாக கூட இருக்கலாம். அவருக்கெல்லாம் கம்பெனியில் இருந்து சாப்பாட்டுக்கு காசு தர தேவையே இல்லை. சாப்பிடாது உடல் மெலிந்து இருப்பார். வயலூரிலிருந்து வருபவர், உறவின் முறையில் ஒரு தங்கச்சி, இதுதான் அவன் வேலை பார்த்த மூன்று வருடத்தில் ரமேஷ் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டது.
வடக்கூர் வடக்கு
தீபத்தில் வேலை பார்த்தவர்களில் பாதிக்கு மேலானோர் வடக்கூர் வடக்கு மக்களே. அவர்களிடம் ஒரு கெட்ட பழக்கம், எல்லாரிடத்தும் அன்பு செலுத்துவது. எப்போதும் அன்போடும், அதிக உரிமையோடும் பழகுவார்கள். வாஞ்சையோடு உறவாடுவார்கள். யாரிடம் கடிந்து பேச மாட்டார்கள். மேலாளர் ராமராஜன், இசைக்குயில் சின்ன தவமூர்த்தி, பெரிய தவமூர்த்தி, இளையராஜா, விஜய் என அந்த பட்டியல் நீளும். இதற்கு விதி விலக்கு, தெற்கு வீதியில் வீதியில் இருந்து வரும் சீனு அண்ணன், கலை அண்ணன் மற்றும் சில இரவு ஊழியர்களும் மட்டுந்தான்.
ரிசல்ட்
பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும் நாள். இவ்வாண்டு இவனுக்கே இன்டெர்நெட் மூலம் ரிசல்ட் பார்க்க தெரிந்து விட்டது. செல்போன் நெட்டோ அல்லது SMS ரிசல்ட்டுக்கென்றோ காசு செலவழிக்க தேவை இல்லை. செல்வனுக்கு இரு வழிகள் இருந்தன. நல்ல மார்க் எடுத்தால் தன்னடக்கம் போன்று நடிப்பது. மார்க் குறைந்தால் வீட்டில் கடந்த ஆண்டு புதியாய் வாங்கியிருந்த கலர் ஓனிடாவை துணைக்கு அழைப்பது. மதிப்பெண்கள் ஆயிரத்தை தாண்டியது அவனுக்கு மகிழ்ச்சியே. அந்த மதிப்பெண் எதுக்கு உதவியதோ இல்லையோ தீபம் பிளக்ஸ் ஊழியர்களிடத்தில் அவனுக்கு ஒரு நன்மதிப்பைக் கொடுத்தது.
பகுதி நேர வேலை
செல்வனுக்கு கவுன்சிலிங்கில் திருவாரூர் திருக்குவளையில் அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினீயரிங் கிடைக்குமாறு தெரிந்தது. முந்தைய நாள் இரவு சென்னை பஸ்ஸில் அப்பாவும் மகனும் ஏறினர். அப்பா சிலவற்றை சொல்லி இது வேண்டாம் என்று சொல்லவே, இருவரும் இறங்கி தஞ்சாவூர் மேம்பாலம் அட்லாப்ஸ் ராணி பாரடைஸ் திரையரங்கில் சுப்ரமணியபுரம் இரண்டாம் காட்சிக்கு சென்றார்கள். அப்பா கண்ணில் க்ளைமேக்ஸில் கண்ணீர் வர, செல்வனோ தன் க்ளைமேக்ஸ் என்னவென்று தெரியாது கலங்கினான். வேலையை தொடர்ந்துகொண்டே, BCA படிக்கலாம் என்ற தன் அண்ணனின் யோசனையை ஏற்றான். அதையும் ஏற்றுக்கொண்ட ஓனர், அவனுக்கு பகுதி நேர வேலைக்கு வாய்ப்பளித்தார் அதுவும் அதே முழு 1500 ரூபாய் சம்பளத்தில். மூன்று ஆண்டுகள் கல்வியைத் தடங்கலின்றி பயில அந்த தொகை அவனுக்கு பேருதவி புரிந்தது. அவன் பெற்றிருந்த கம்ப்யூட்டர் அனுபவம், அவன் கல்லூரியில் அவனுக்கு நல்ல பெயரையும் கொடுத்தது. மூன்று ஆண்டுகள் தீபத்தில் இரவு 9 மணிக்கு மேல் அவர்களின் இராஜ்ஜியம் தான். இரவில் எந்நேரம் போனாலும் தீபத்தில் டிசைன் செய்து பிரிண்ட் வாங்கி வந்து விடலாம் என்ற நிலையை உருவாக்கினார்கள். இளங்கலையை முடித்து, முதுகலை முழுநேர MCA படிக்க முன்கட்டணம் செலுத்த வேண்டியிருந்த போது ரூபாய் 15,000 கொடுத்து உதவினார். செல்வன் கேம்பசில் வேலைக் கிடைத்து அந்த பணத்தை திருப்பிக் கொடுத்த போதும் அவர் அதை ஏற்க வில்லை. பிரபுவும் MCA படித்து கேம்பசில் வேலைப் பெற்றான்.
சம்பவம்
MCA முழு நேர வகுப்பு என்பதால் பகுதி நேர வேலைக்கு அவர்கள் வரவில்லை. மாறாக விடுமுறைகளின் போதும் சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் தொடர்ந்து தீபத்தில் பயணித்தார்கள். தீபம் பிளக்ஸ் இன் இன்னொரு கிளை தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் - திருவையாறு பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் முதல் மாடியில், உதயம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் அருகே போட்டோ ஸ்டுடியோ உடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. பெரும்பாலும் செல்வன் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு தான் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்வான். நல்ல ஞாயிற்றுக்கிழமை அது. நாடோடிகள் போன்று தோற்றமுடைய சில மக்கள் குடும்பமாக அன்று ஆபீஸ் உள்ளே வந்து, ஐயாயிரம் ரூபாய்க்கு 100 ரூபாயாக சில்லறை வேண்டும் என்று கேட்டார்கள். செல்வனின் பின்னே இருந்து ரேவதி அக்கா, சோனா அக்கா, பார்த்திபன் தம்பி மூவரும் கொடுக்க வேண்டாம் என அறிவுறித்தினர். சில்லறை கொடுப்பதால் என்ன வந்து விடப் போகிறது என்று அவர்கள் சொன்னதை பெரிது படுத்தாமல் கல்லாவில் இருந்து அவர்கள் கேட்டது போலவே 100 ரூபாய் நோட்டுகளாய் முதலில் எடுத்துக் கொடுத்தான். அவர்களும் செல்வன் முன்னே எண்ணினார்கள். பக்கத்தில் இருந்த இன்னொருவர் 100 ரூபாய் நோட்டுகள் வேண்டாம், பத்து ரூபாய் தாள்களாக இருந்தால் கொடுங்கள் என்றார். இது சரி வராது, சில்லரை இல்லை என்று சொல்லலானான். கண் முன்னே எண்ணிய பணம் தானே என்று அவனும் அப்படியே வாங்கிக் கொண்டு அவர்கள் தந்த 5000 ரூபாயை திருப்பிக் கொடுத்தான். வாங்கிக் கொண்டவர்கள் சென்று விட்டார்கள். ஒரு நிமிடம் கூட ஆகி இருக்காது. ஏதோ உள்ளுணர்வு சொல்ல அவசரமாக பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தால், 40 நோட்டுகள் மட்டுமே இருந்தது. ஆயிரம் ரூபாய் ஏமாந்து போனான். உடனே அங்குமிங்கும் ஓடி அவர்களைத் தேடிப் பார்த்தால், ஒன்றும் உதவவில்லை. அப்போது செல்வனுக்கான சம்பளம் ஒரு நாளைக்கு ரூபாய் 300. ஆயிரம் ரூபாய் என்றால் அது கிட்டத்தட்ட இரண்டு வார உழைப்பு. தயங்கி ஓனருக்கு கால் செய்தான். செய்த தவறுக்கு கடுமையாகக் கடிந்து கொண்டாலும், "நைட்டு கணக்கு அனுப்பும்போது சீனு சாருக்கு போன் பண்ணி, ஆயிரம் ரூபாய் கம்மியா இருக்கு. அண்ணன் உங்க கிட்ட பேசுறேன்னு சொன்னாருன்னு மட்டும் சொல்லிடு" என்று சொன்னார். அந்த மாதம் எவ்வித கழிவுமின்றி செல்வன் தன் மாத சம்பளத்தை பெற்றுக் கொண்டான்.
தீபத்தின் பட்டொளி
பிரபுக்கும் கார்த்திகையனுக்கும் தீபம் ஒளியேற்றி இருக்கிறது. அதே போல் பலரும் வாழ்வில் வெளிச்சம் பெற தீபம் உதவியிருக்கிறது. பலருக்கும் ஓனர் உதவி செய்திருக்கிறார். அங்கே வேலை பார்த்த பலர் அதே திவான் நகரில் இப்போது தனி ஆபீஸ் போட்டு பிசினஸ் செய்கிறார்கள். இன்றும் திரு. ஆனந்த் அண்ணன் அவர்களோடு நட்பும் அன்பும் பாராட்டுகிறார்.
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
- தமிழ் மறை
பொருள் : உதவியின் சிறப்பு, பெறுபவரின் மனநிறைவில் உள்ளது.
- தஞ்சையின் அரசகுமாரன்
05-01-2025
அருமை நண்பா! மலரும் நினைவுகள்
ReplyDeleteநன்றி நவீன்
Delete