Saturday, April 20, 2024

உப்பு மாங்காய்

சுருக்குப்பை கிழவி. சுருக்கங்கள் சூழ் கிழவி. பார்க்கும் போதெல்லாம் கூடையுடனே குடியிருப்பாள். கூடை நிறைய குட்டி குட்டி மாங்காய்கள். வெட்டிக்கொடுப்பது தான் வேலை. கேட்பது ரெண்டே கேள்விகள். 


1. காருவாயா? எட்டணாவா?

2. உப்பா ஒரப்பா?


எட்டணாக்கு மூன்று மாங்காய் கேட்டால் ஏறெடுத்து முகத்தைப் பார்த்து விட்டு, மூன்றாவது மாங்காயை வெட்டிக் கொண்டே, மூனெல்லாம் வராது என்று சொல்லும் கறார் கண்மணி. வெட்டிய பாவத்திற்காக உடனே அந்த கத்தியாலேயே உப்பைக் கொட்டிச் சுடச்சுடப் பரிகாரம் தேடும் பாசக்காரி.




சின்ன கேட்டை கடந்து அந்த கூடைக் கிழவியைப் பார்த்துப் பழகி விட்டு போனோர் எத்தனையோ? பாட்டித் தொழிலுக்கு ஒரு போட்டி தொழிலோர் இல்லை. நீ சாதாரண பாட்டி அல்ல. எங்கள் எல்லோர் மனதிலும் என்றும் வாழும் என்றும் இளைய இராணிப்பாட்டியே.. ஆம், எட்டு ஆண்டுகள் எங்களை ஆட்சி செய்த இராணி தான்.


உன் பேரைத் தவிர வேறேதும் தெரியாது. 

பேர் தெரிந்தால் போதாதா பேரனாக இருக்க...


- தஞ்சையின் அரச குமாரன்.

21-04-2024


Sunday, April 14, 2024

படையப்பாவும் ஹெர்குலசும்

    

                 இன்று 10-04-2024. பாட்ஷா ரஜினி சொல்லும்  நான்காம் எட்டை கடந்தவன் சரவணன். சரியாக சொல்ல வேண்டின் 1990 ஆம் ஆண்டிலேயே பிறந்த அக்மார்க் 90s கிட்ஸ் அவன். காலை எழுந்தவுடன்  பல்லைத் தேய்க்கிறானோ இல்லையோ முதல் வேலையாக செல்லைத் தேய்த்துக் கொடுக்கும் குணத்தினன். வழக்கம் போல முழித்தவுடன் முகம் கழுவாமல் முகநூல் பக்கம் வந்து விட்டான். முதல் பதிவாக அவன் கண்ணில் பட்டது இதுதான். "படையப்பா படம் வந்து இன்றோடு 25 வருடம் ஆகிவிட்டது. படையப்பா என்றதும் உங்கள் மனதில் வருவது என்ன?"  என்றது அப்பதிவு. 

                               புன்முறுத்தான் சரவணன். விட்டத்தைப் பார்த்தான். கொசுவத்தி சுருளைப் போல், கருப்பு வெள்ளையில் ஒரு சக்கரத்தை, வெயில் காலத்தில் விசிறி சுற்ற முயலுமே..., அதுக்கும் காற்று வராமல் நமக்கும் காற்று வராமல், ஆமாம் அந்த வேகத்தில் மனதில் சுற்றி விட்டான். 1999க்கு சென்றான். சரவணன் நான்காம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து விட்டு வெயிலை வீணாக்காமல் கோடை விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்த காலம்.












 









படையப்பா படம் ரிலீஸ் ஆகிவிட்டது. நண்பர்கள் மத்தியில் படம் பற்றித் தான் பேச்சு. TV, FM எங்கு பார்த்தாலும் "எம்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா என்கூட உள்ளதெல்லாம் இளஞ்சிங்கப் படையப்பா" என்று புடைத்துக் கொண்டிருந்தார்கள்.


சரவணன், எப்போது நம் அப்பா நம்மை படத்துக்கு அழைத்துச் செல்வார் என ஏங்கிக் கொண்டிருந்தான். சாந்தி, கமலா இரண்டு தியேட்டரிலும் படையப்பா படம் தான். ஹவுஸ் ஃபுல். திரையரங்கு வளாகத்துக்குள்ளேயே நுழைய முடியவில்லை. அப்படி ஒரு கூட்டம். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் காவலர்கள் தடியடி வரைச் சென்று விட்டார்கள். அப்பா எவ்வளவு முயன்றும் தியேட்டர் உள்ளே கூட செல்ல முடியவில்லை. வாடிய முகத்துடன் வீடு வந்து சேர்ந்தார்கள். தெரு கூட்டாளிகள் எல்லாம் படத்தைப் பார்த்து விட்டு  சுகானுபவம் செய்ய துவங்கி விட்டார்கள். நாமும் ஆட்டத்தில் இருக்க வேண்டுமானால் படத்தை பார்த்தே ஆக வேண்டும். திரைவிமர்சனம் நிகழ்ச்சியில் வரும் மூன்று நான்கு காட்சிகளை எல்லாம் வைத்துக் கொண்டு ஓட்டிவிட முடியாது. 


    நான்கு ஐந்து நாள் ஓடியது. மீண்டும் அப்பா வாங்க படையப்பா படத்துக்கு போவோம் என்று உசுப்பி விட்டார். இந்த முறை படம் பார்த்து விடுவோம் என்று குடும்பமே சிலாகித்தது. ஆனால் கவுண்டர் டிக்கெட் கிடைக்கவில்லை. அப்பா மேலாளர் அரை உள்ளே சென்று அவருக்கு வணக்கம் வைத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார். எப்படியும் டிக்கெட் கிடைத்துவிடும், இன்று ரசினியை ரசித்து விடலாம் என்று காத்திருந்தோம். "இந்த ஷோவுக்கு டிக்கெட் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டதாம். செகண்ட் ஷோ-வுக்கு  வேண்ணா டிக்கெட் இருக்காம்." அப்பா செகண்ட் ஷோவுக்கு ஓகே சொல்லிவிட வேண்டும் என்று மனதிலேயே அறுபடை வீட்டுக்கும் அங்க பிரதட்சணம் செய்து பார்த்தான். கந்தனின் கருணைக்கண் அவன் மேல் படவில்லையே!!! அப்பா - இன்னொரு நாள் பாத்துக்கலாம் வாங்க என்று சொல்லி வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டார். 


இரு தினங்கள் ஓடியது. படையப்பாவுக்கு இது மூன்றாவது படையெடுப்பு. இந்த முறை அப்பா திரு.ஹெர்குலஸ் உடன் வீட்டிற்கு வந்தார். ஹெர்குலஸ் - அவனைப் பற்றி சொல்லியாக வேண்டும். மற்ற சைக்கிள்களை காட்டிலும் ரொம்ப மிடுக்கானவன். பிரீமியம். 

                                            



அவன் சீட்டில் உள்ள சாகப்சர் உண்மையிலேயே வேலை செய்யும். குரங்கு பெடல் போட்டே சிந்தாமல் சிதறாமல் பார்சல் டீ கூட சொம்பில்   வாங்கி வந்துவிடலாம். ஏறி உட்கார்ந்து ஓட்டினால் ராஜமிடுக்கு வந்து விடும்.

ஆறு மணி ஷோவுக்கு லேட் ஆகி வருவதால் அப்பா அவர்களை நடந்து வரச் சொல்லாமல் சைக்கிளில் ஏறச் சொன்னார். அப்பாவையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர். இது நாள் வரை தான் சுமந்த மொத்த குடும்ப பாரத்தை ஹெர்குலசிடம் இறக்கி வைத்தார். இல்லை ஏற்றி வைத்தார். சரவணனுக்கு வயது 9. அண்ணனுக்கு 12 . தம்பிக்கு 8. ஐந்து பேரும் ஒரே சைக்கிளில் செல்ல முடியுமா? அப்பா அண்ணனையும் சரவணனையும் முன் கம்பியில் உட்காரச் சொன்னார். சைக்கிள் கேரியரில் அம்மா உட்கார்ந்து கொள்ள, தம்பியோ அப்பாவின் தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டு கேரியரில் நிற்கலானான்.  தேர் கிளம்பியது. ஒருபுறம் பயம் இருந்தாலும் ஐவரும் ஒரே மிதிவண்டியில் வண்டியில் செல்வது என்பது சொல்லில் அடங்கா பெருமைதான்.


சாலையில் அப்பாவுக்கு தெரிந்தவர்களோ எங்களைப் பார்த்து சிரிக்க, அவனும் சிரித்துக் கொண்டான். இந்த தடவையாவது டிக்கெட் கிடைக்குமா என்று எண்ணிக் கொண்டே இருக்கையில் தியேட்டர் வந்து விட்டது. இந்த முறை அப்பா கவுண்டருக்கு செல்லாமல் நேரே மேலாளர் அறைக்குச் சென்று டிக்கெட்டையும் வாங்கி விட்டார். போடு...


    அப்பாவுக்கும் அண்ணனுக்கும் 20 ரூவா செகண்ட் கிளாஸ் டிக்கெட். மற்றும் மூவருக்கும் 5 ரூவா லேடிஸ் டிக்கெட். சரவணன் லேடீஸ் டிக்கெட் கிழிக்கும் அண்ணனை கடந்து சென்று விட்டால் வெற்றி தான். உயரம் கருதி மாட்டிக்கொண்டால் நிற்கவைத்து கடைசியில் தான் உள்ளே அனுப்புவார். சிலக் காட்சிகளை கூட  இழக்க நேரிடும். காலை கொஞ்சம் மடக்கி அப்பு போல் ஊர்ந்து போக முயற்சித்தான். உயரம் குறைவு, சின்ன பையன் தான் நான் என்று  காட்டுகிறாராம். நடந்த தள்ளு முள்ளுவில் எப்படியோ அடித்து புடித்து உள்ளே வந்து விட்டதில் ஏக சந்தோஷம். இடுக்கில் மறந்த மிடுக்கை மீண்டும் கொண்டான். 

    ஹவுஸ் ஃபுல் காட்சி. இடைவேளைக்கு பிறகாவது யாருக்கும் தெரியாமல் எகிறிகுதித்து போய் உட்காரும் பஞ்சு சீட்டுக்கும், ஹவுஸ் ஃபுல் என்பதால் இன்று வழியில்லை. சரி படையப்பா பஞ்சாயத்துக்கு வருவோம்.


எல்லா சொத்துக்களையும் இழந்து, மீண்டும் ஜீரோவில் தொடங்கி பீரோ நெறைய பணம் பண்ணும் அதே ரெகுலர் ரசினி டெம்ப்ளேட் தான். ஆனால் திரைக்கதை என்று இருக்கிறதே அது தான் அந்த மேஜிக். பக்கா கமர்சியல் படம். 


விண்டேஜ் ரஜினி, நீலாம்பரி, சிவாஜி என அட்டகாசமான நடிகர்கள். ஆக்சன், காமெடி, எமோஷன் என சரிவிகிதத்தில் கலந்த படம். படத்தின் சில 

காட்சிகளை இன்றும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். நீலாம்பரியின் சபதம், தூணைப் பிடித்து அப்படியே சரிந்து உட்காரும் சிவாஜி, நீலாம்பரியின் காலை பிடித்து விடும் சௌந்தர்யாவின் வெகுளித்தனம், "உன் வீட்டுக்கு நிச்சயம் பண்ண நான் வரேன்னு சொன்னேன். உன் பொண்ண நிச்சயம் பண்ண வரேன்னு சொல்லல" என்று நேர் வழியில் பழிக்கு பழி வாங்கும் லட்சுமி, "மாப்பிள்ளை இவர்தான் ஆனா இவரு போட்டு இருக்கிற சட்டை  என்து." என்ற செந்திலின் சென்சேஷனல் காமெடி, என சொல்லிக் கொண்டே போகலாம்.


ரஜினி ஸ்டைல் சொல்லவே தேவையில்லை. 

  • "என் வழி தனி வழி சீண்டாதே. "
  • "அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்த சரித்திரமே இல்லை.
  • "கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது"

என எண்ணற்ற பஞ்ச் டயலாக்குகள். 



    அந்த மயிற்கூச்சிடும் காட்சி. வயசான  படையப்பாவை வீட்டிற்கு அழைத்து விட்டு, வீட்லிலுள்ள இருக்கை, சோபாசெட் என எல்லாவற்றையும்

எடுத்து விட்டு மாப் எல்லாம் போட்டு முடித்து வீட்டை ரெடியாக வைத்திருப்பார்கள். நீலாம்பரி மட்டும் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருப்பார். ரஜினிக்கு இருக்கை இருக்காது. என்ன செய்ய போகிறார் ரஜினி என எல்லாரும் காத்திருக்க, தன் சால்வையை எடுத்து ஸ்டைலாக மேலே இருந்த சங்கிலியை இழுத்து மர ஊஞ்சலில் ஏறி உட்கார்ந்து சல்யூட் அடிக்கும் அந்த காட்சி. ஆர்ப்பரிப்பு. AS திலிப் குமாரின்( நம்ம ARR தான்) அந்த கரு இசை (Theme music) அட்டகாசம். மற்றும் அந்த வெற்றிக் கொடிக்கட்டு பாடல் இன்றும், வெறியோடு உழைக்கத் தூண்டும் மோட்டிவேஷன் சாங்.


            படத்தில் எத்தனையோ நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் சரவணனுக்கு பிடித்தது என்னவோ கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் வரும் அந்த பகுதி தான். அந்த சண்டையின் போது ஒரு கட்டத்தில் ரஜினி தன் சட்டையை கழற்றி உடம்பை முறுக்கேற்றுவார். அப்போது ரஜினியை பார்த்து நம்ம அப்பாவி அப்பாஸ் "What a man?" வாயைப் பிளப்பதெல்லாம் டூ டூ முச். ரவிக்குமார் அண்ணே! என்னண்ணே இதெல்லாம்? 90's கிட்ஸ்க்கே கிச்சு கிச்சு மூட்டிய காட்சி அது. 

ஆயிரம் சொன்னாலும் அந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்படம் படையப்பா தான். தமிழ்நாட்டில் முதன் முதலில் 50 கோடி ரூபாய் வசூலித்ததும் அதுதான். 

                


இப்போது ரீ-ரிலீஸ் செய்தாலும் படையப்பா பார்க்க பெரும்படை திரளும்  என்பது நிதர்சனமே!!!


- தஞ்சையின் அரச குமாரன்

15-04-2024

Sunday, March 3, 2024

பிரேமாவின் பெண் குழந்தை

       பிரேமாவின் மூத்த ஆண் குழந்தைக்கு முன் பிறந்த இளைய பெண் குழந்தை அவள். வயலும் சேறும் இரண்டற கலந்த ஊர். முழுதாய் மூன்றாம் வகுப்பைத்  தாண்டாதவள். அதற்காக அவரது அப்பா வெங்கட் அக்குழந்தைக்கு அடுப்படியைக் கொடுத்து அழகு பார்த்தார். கல்வியை கைவிட்டதால், தன்னம்பிக்கை - துணிச்சல் கை கூட வில்லை. பிரேமா அம்மா தவறி விட, பின் வந்த சிற்றன்னையின் கொடுமைகளை அனுபவித்ததாகவும் கேள்வி.


                                       

    திருமணம் ஆகி சோழம் வந்தடைந்தாள். ரயிலை கண்டது, அதில் பயணம் செய்தது எல்லாம் திருமணத்திற்கு பிறகு தான். மூன்று ஆண் குழந்தைகள், பிறந்து ஒரு வருடத்திற்குள் தவறிய பெண் குழந்தை. எப்போதும் கோபப்படாத சாந்தமான முகம். வெகுளி, வெள்ளந்தி. பாசத்தைக் கூட வெளிப்படுத்த தெரியாதவள். யாரும் சிரமப்படாமல் எளிதாக ஏய்த்து விடலாம். தேவைக்கேற்ப நன்றாக ஏத்தியும் விடலாம். தந்தை சொத்தை பிரித்துத் தர மறுத்த போதும் பெரிதாக எண்ணிக் கொள்ளாதவள்.

    ஏமாளி என்றவுடன் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஒட்டுக் குடிசை வீட்டில் குடியிருந்த காலம். சாமியார் போல் வேடமிட்ட ஆசாமி ஒருவர் காலனிக்குள் நுழைகிறார், நம் பெருமாட்டியைப் பார்த்து, முடிவு செய்து விட்டு " உன் புருஷனுக்கு ஒரு கண்டம் இருக்கு, அத போக்கனும்னா...." என்று சொல்லி வீட்டின் ஒரே தங்கமான அணிந்திருந்த காதணிகளை அபேஸ் செய்துவிட்டு "முக்கியமாக இதை யாரிடமும் சொல்லி விடாதே! " என்றபடி  இடத்தைக் காலி செய்தார்.


    மிக்சி, கிரைண்டர், துணி துவைக்கும் எந்திரம் என எதுவும் கிடையாது. வீட்டிற்குள் தண்ணீர் குழாய் இல்லை. அம்மிக்கல், ஆட்டுக்கல், கிணற்றங்கரை தான். நாளும் நாலு பேருக்கும் சேர்த்து துணி துவைக்க வேண்டும்.  மூன்று வேளையும் சமைத்தாக வேண்டும். கணவன் வெளியே உழைக்க, அவளோ சத்தமின்றி, சம்பளம் கேட்காமல், சோர்வில்லாமல் கிட்டத்தட்ட 18 மணி நேரம் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தாள். மிக்ஸி வாங்கியும் கூட கணவன் மிக்ஸியில் அரைத்தால் ருசி சரி இல்லை என்று சொல்ல வெகு காலம் தொடர்ந்து அம்மியில் அரைத்துக் கொடுத்த பாசக்காரி அவள்.

    அடுப்புக்கு மரத்தூளும், அரை மனுவு சவுக்கு விறகும் வாங்கி வருமாறு தன் பிள்ளைகளிடம் கெஞ்சுவதும், பிள்ளைகளோ தங்களுக்குள் நீ போ நீ போ என அடித்துக் கொள்வதும் வாடிக்கையான வேடிக்கை.  காலி பீர் பாட்டிலை அடுப்புக்குள் வைத்து முற்றிலும் மரத்தூளை கொட்டி அழுத்தி, முன்னாள் ஒரு ஓட்டையைக் குடைந்து, பின் குந்துநாப்ல சரியாமல் செருகிய  பாட்டிலை திரும்ப எடுப்பதெல்லாம் சத்தமில்லா சாதனைகள் தான். சாதம் வெந்ததும் கஞ்சி வடிக்க வைத்து விட்டு, அந்தப்  பாத்திரத்தைத் தொட்டுக்கும்பிடும் அம்மாவின் பாங்கை மகன்கள் கிண்டல் செய்வதும் சிரிப்பதும் அடடா!

பொழுதுபோக்கு என்று சொன்னால் சாயங்காலம் ஓடும் சீரியல்களும் எப்பவாவது சென்று பார்க்கும் திரைப்படங்களும் தான். பக்கத்து வீட்டில் பார்க்கத் தொடங்கிய மெட்டி ஒலி, இவர்கள் வீட்டு புது டிவியில் முடிந்தது
என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

                                  




    யாருடனும் அவ்வளவாக பேசுவது கிடையாது. அப்படியே பேசினாலும் எவ்வாறு பேச வேண்டும் என்றும் அறியாது பேசி விடுவது வழக்கம். ஒரு முறை வீட்டில் இருந்த பழைய கணினியை தெருவில் இருந்த ஒருவர் விலைக்குக் கேட்டார். மகனோ,  "அம்மா, இது நெறயா வேலை வைக்கும். வாங்கினதுக்கு அப்பறம், சரிபண்ண என்னை எல்லாம் கூப்பிடீங்க அவ்வளவு தான்!!!" என்று கறாராக சத்தியம் வாங்கிக்கொண்டு, அம்மாவும் மகனும் அந்த வீட்டில் கணினியைக் கொடுத்து விட்டு, கையில் காசை வாங்கிய அந்த கணமே, அம்மா அவர்களிடம், "இது அடிக்கடி ரிப்பேர் ஆகும். ரிப்பேர் கிப்பேர் ஆச்சின்னா பையன்ட சரி பண்ணி தரச் சொல்லி எல்லாம் கேட்கக்கூடாது" என்றாரே பார்க்கலாம். வாங்கிய அக்காவின் முகம் மாறியது.  அடி அம்மாடி, பையன் ஒரு கணம் அரண்டே போய்விட்டான்.


    சிறுவயதில் இருந்தே அனுபவித்த கொடுமைகளோ என்னவோ... மனநோய்க்கு உள்ளாகிறாள். தன் கணவன், பிள்ளை என யாரையும் நினைவில்லை. கூலித் தொழிலாளி கணவனோ ஆதரவு யாருமின்றி மனைவியைக் காப்பாற்ற கையற்றுத் தவிக்கிறார். உற்றார் உறவினர் வீட்டுகெல்லாம் சென்றும் உதவ யாரும் முன் வரவில்லை. அப்போது தான் அது நடந்தது. ஒரு பேருந்து நிலையத்தில் திடீரென்று ஓட ஆரம்பித்து விட்டாள். பேருந்து நிலையத்தின் வாசல் வழியாக சட்டென விரைந்தது ஒரு பேருந்து. கணவன் ஓடிச் சென்று ஒரு கணம் தடுக்க வில்லை என்றால் அன்றே போயிருக்க கூடும். ஒரே கூச்சல். நடந்ததை அறியாத அங்கிருந்த போலீசார் அக்கணவனை அடிக்க, பையனோ "இவரு எங்க அப்பா தான், எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதான்..." என கண்ணீர் விட, ஒரு வழியாய் அங்கிருந்து புறப்பட்டு மனைவியை அரசு மருத்துவமனையில் மனநலப்பிரிவில் சேர்த்துக்  கஷ்டபட்டுக் காப்பாற்றினார். 20 ஆண்டுகளாய் தொடர் மருந்துகள்.

                                             

    அன்பான கணவர். அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்க மாட்டார். அவளோ அவருக்கு வேண்டிய எல்லாத்தையும் செய்துக் கொடுப்பார். மூடிகேற்ற ஜாடி. அப்பா,  மகன்களிடம் அம்மாவுக்கு பூவன் பழம் வாங்கி கொடுக்க சொல்லுவதும், எந்த நல்ல காரியம் என்றாலும் அம்மாவை எதிரில் நிற்கச் சொல்லி ஆசீர்வாதம் பெற்றுச் செல்லுமாறு சொல்வதும் அப்போது அம்மா அசடு வழிவதும்  வழக்கம்.

    பிள்ளைகள் பெரியவர்கள் ஆனார்கள்.  திருமணம் செய்து வைத்தார்கள், கொண்டார்கள். பிள்ளைகள் குடும்பமானார்கள். இவர்கள் பரபரத்த காலம் போய் பிள்ளைகள் பரபரப்பாய் சுற்றிக் கொண்டிருந்தார்கள். எல்லாக்கடமையும் முடிந்தது. வயதும் முதிர தொடங்கியது, தூக்கம் குறைந்தது. ஏக்கம் தொடங்கியது. கடைசி வரை வீட்டு வேலையும் குறைந்த பாடில்லை. சூழ்நிலை. தலைமுறை இடைவெளிக்கு பக்குவப்படாத குழந்தை மனம். ஏகப்பட்ட சிந்தனைகள், புலம்பல்கள், எத்தனையோ ஆலோசனைகள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை... வீட்டில் எல்லாரும் தூங்கி விட்டார்கள், புரண்டு புரண்டு படுக்கிறாள். தூக்கம் வராது ஒரே சிந்தனை. கணவனுக்கு முன் தான் சென்று விட வேண்டும் என்று எண்ணுகிறாள், மன அழுத்தம் பீறிடுகிறது. இயற்கை தன்னை அழைக்கும் முன்னே அவளே முந்திக்கொண்டு இந்த கொடூர வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்றுக் கொண்டாள். சுமார் 20 வருடங்களுக்கு முன் விடுதலை அடைய வேண்டிய உயிர் கடைசியில் மிகுந்த உடல், மன உளைச்சலுக்கு ஆட்பட்டு இறையடி சேர்ந்தது.

    ஆரம்ப காலத்தில் எல்லாம், பணக் கஷ்டத்தில் இருந்து விட்டு, அந்த நிலை மாறும் போது மனமும் அடுத்தக்கட்ட கவலையைத் தேடிக் கொள்கிறது. ஆக மொத்தத்தில் மனசுக்கு ஒரு கவலை இருந்து கொண்டே இருக்க வேண்டும். எல்லாம் கடந்து போகுமென சொல்ல கும்பல் உண்டு, அதற்கு எவ்வளவு நாள் ஆகும் என்பதைச் சொல்லத்தான் யாருமில்லை...  இறப்புக்கு இதுதான் காரணம், அது தான் காரணம் என்று ஆளாளுக்கு தனக்குத் தேவையான கதையை எழுதிக்  கொண்டிருக்காமல், விதியிடம் பழியைப் போட்டு விட்டு மன அமைதித்  தேடிப் பயணப்படத்தான் வேண்டும்...

-  தஞ்சையின் அரச குமாரன் 

04 -03-2024

Monday, May 29, 2023

தட்டு வண்டியில் காளிக்கோயில் - சிறுகதை

        கந்தன் வேலைக்குச் சென்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பி இருந்தான். காளிக் கோயிலைத் தாண்டி தான் அவன் வீட்டை அடைந்தாக வேண்டும்.  கோயிலைக் கடக்க முற்பட்டப் போது அக்கோயிலில் எஞ்சி இருந்த சில பழைமை மாறாக் காட்சிகள் அவனுக்கு அவனது பால்யத்தைத்  திரும்பி தந்தன. 

        எட்டாவது வகுப்பு தொடங்கிக் கல்லூரி சேர்ந்த சிறிது நாள் வரை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என அட்டவணைப்  போட்டு வாரந்தவராது அந்த காளி கோயிலுக்கு சென்றவன் அவன். அவ்வளவு பக்தியா என அவசரப்பட்டு கந்தனுக்கு அதிக மதிப்பெண்களை அள்ளிப் போட்டு விட வேண்டாம். கடவுள் மறுப்பை, பெருமை என அவன் கர்வம் கொண்ட காலம் அது.

       பிறகு எதற்குபூக்கார அம்மா பிரேமாவின் பூக்கடைக்கு தேவையான சாமான்களை அவர் வீட்டிலிருந்து காளிக் கோயில் வரை எடுத்துக் கொண்டுச் சேர்க்க அவன் பெறும் ரூ.10 கூலிக்காக. பத்து என்பதெல்லாம் அப்போது அவனுக்கு மிகப் பெரிய எண். அதை வைத்து இரண்டு நாள் காலை இரவு சிற்றுண்டியை முடித்து விடலாம். "காலேஜ் படிக்கிற பையன் தட்டு வண்டி இழுக்கக் கூடாது" என அப்பா தனது தட்டு வண்டியைக் தர மறுத்த போது தான் வண்டி இழுப்பதை நிறுத்தினான். 


தட்டு வண்டி


              மார்கழி மாத காலங்களில் பிரம்ம முகூர்த்தத்திலேயேக் கோயிலுக்குச்  சென்று அங்கே தரப்படும் சர்க்கரைப் பொங்கலுடன் சண்டை செய்தவன் அவன்.  பூரண (பௌர்ணமி)  நாட்களில் மதியம் காளிக் கோயில் அன்னதானங்களில் கலந்து கொண்டு, இல்லை இல்லை "கலந்து உண்டு" விழாவை தவறாது சிறப்பித்துக் கொடுக்கும் இராச குமாரன் அவன். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது தவறாது கோயிலுக்குச் சென்று அங்கே கொடுக்கப்படும் செங்கரும்பை இருமுறை மும்முறைப் பெற்று வீடு சேர்ப்பதை எல்லாம் வீரம் என எண்ணிக் கொண்டு இல்லாத மீசையை தொந்தரவு செய்தவன் அவன். சாமிக்குத் தெரியாமல் சிலை அருகில் இருக்கும் காரூவா, எட்டணா, யாகத்தில் உடன்கட்டை ஏறிய கருப்புக் காசுகளைத் தரையில் தோய்த்து பெட்டிக் கடைக்குக் கப்பம் கட்டிய "மிட்டாய் மிராசு" அவன்.

கோயில் முகப்பு 


கோயில் மண்டபம் 

                

பிரேமா அம்மா பூக்கடை


            செங்கற்களை மாற்றி அடுக்கி, தான் சம்பாதித்த முதல் கூலி  ரூ.2 இதே இடத்தில் தான் என்பதை எண்ணி மனதால் மண்ணைத் தொட்டான். கோயில் நுழைவுக்குப் பக்கத்தில் நாற்காலியில் ஆங்கில செய்தித் தாள் படிக்கும் வசீகர மீசை வைத்த குண்டு பெருசை, ரொம்ப நாள் மிலிட்டரி என நினைத்து ஏமாந்து பின் இன்ஜினியர் என அறிந்து ஏமாந்ததை ஆசையாய் அசை போட்டு அசடு வழிந்தான். ஒருமுறை தன் அப்பா குடித்து விட்டு வீட்டை விட்டு அம்மாவைப் போக சொன்ன போது இரவு 12 மணிக்கு காளிக்கோயில் வந்து அம்மாவுடன் கும்பிட்டு விட்டு ஊர் சென்ற நினைவை எவ்வளவு தடுத்து நிறுத்தியும் அவனால் முடியாது தவித்தான்.

            அவனுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அவன் ஓடி ஆடி விளையாடியது எல்லாம் இந்த வட பத்ர காளிக் கோயிலில் தான். பம்பரம், பளிங்கி, ஆபியம் மணியாபியம், பெப்பே, செதுக்கு சில்லு என அவன் கால் படாத இடமே இல்லை. கோயில் மேற்கூரையையும் விடாது, பந்து எடுக்க, பட்டம் எடுக்க என அவன் கால் வைத்து மிதித்து ஏறாத கோயில் சிலையும் இல்லை. பார்க்க பார்க்க அவன் மனது அவனை ஏதோ செய்தது. அதே பூக்காரம்மா இன்றும் அங்கே கடை போட்டிருந்தார். கதம்பமும், நெய் விளக்கும் அதன் வாசனைக் கொண்டு வருடி அவனை கிறங்கச் செய்தன.

                அப்படியே காளிக் கோயிலின் விகாரத்தின் உள்ளே சென்றவன், அந்த வட பத்ர காளியம்மனை நெருங்க நெருங்க அவனை அறியாது அவன் குழந்தை ஆனான். முன்பெப்போதும் இல்லாத ஒரு வகையான உணர்ச்சிமிக்க பேருணர்வு. ஒரு கணம் அவன் தன் உறவுகளை மறந்தான்,  உலகை மறந்தான், உயிரை  மறந்தான். நாடி நரம்பெல்லாம் மின்சாரம் பாய்வதை போல் உணர்ந்தான். அவன் கண்கள் மூடின. அவனை அறியாமல் கைகள் மேல் கூப்பிச் சென்றன. கனமான கண்ணீர் துளிகள் கீழிறங்கி அவன் மார்பை நனைத்தன. " அம்மா! காளியம்மா!! உன்ன தேடி வந்துடேம்மா!!! என்ன பாத்துக்கம்மா!!!!"  என்றவாறே விகாரத்தின் நடுவே நின்று ஓங்கி கத்தினான். 


கோயில் விகாரம்


நிசும்பசுதனி என்கிற வடபத்ர காளியம்மன்



- தஞ்சையின் அரச குமாரன். 

30 - 05 - 2023

Tuesday, May 16, 2023

அப்பா

அறியாத வயசில என்ன எப்படியெல்லாம் கொஞ்சிருப்ப...

புரியாத வயசில என்ன எப்படியெல்லாம் பொறுத்திருப்ப...


அருகருகே இருந்தும் அமைதியாய் கடந்தோம்,

எதிரெதிரே இருந்தும் எதிரியாய் முறைச்சோம். 

நெசத்துல வில்லன் என்னவோ விடலைப் பருவந்தான். 




சின்ன வயசில செத்த மாதிரி நடிப்பியே !! நடிச்சது போதும் !!!

எந்திரிப்பா ! எந்திரிப்பா !!

"போனா தான் தெரியும் என் அருமை" அப்படினு சொல்லுவியே !

அருமை தெரிஞ்சிடுச்சி, அழுடான்னு விட்டிட்டு போயிட்டியா !!!

கோவந்தான் உன் பாசம், வேர்வை தான் உன் வாசம், பாவி மனம் அறியலயே!

அப்பா தான் எந்தலைவன் , இனிமேல இறைவன்னு எல்லாமே தெரிஞ்சிக்கிட்டேன்!!!

அப்பப்பா  ஒன்னு ரெண்டா நீ பட்ட துயரம்! ஆனா அத, எங்க ஒருத்தர்ட கூட  நீ  சொல்லலியே!!!

நான் ஏதும் தப்பா பேசியிருந்தா தவறாம மன்னிச்சிடுப்பா!!!




உன்ன கட்டி புடிச்சு முத்தம் கொடுக்க வரும் உழைப்பின் வாசனை தான் எனக்கு  வேணுமப்பா!!

முத்தம் கொடுக்கயிலே உன் தாடி தான் இனி குத்திடுமா?

செருப்பில்லாம  பொத்து போட்ட உன் காலுக்கு முதல் முத்தம் ,

காப்பு காச்சிய உன் கையிக்கு தருவேனே மறு முத்தம்... 

அந்த கையால இனியுந்தான் யார் என்னை தட்டி கொடுப்பா !!! 

காட்சிகள நான் ஓட்ட கண்ணு ரெண்டும் கலங்குதப்பா...

நடந்தத நான் நெனைக்க நா வறண்டு போகுதப்பா...

அளவில்லாம அழுவுறேன், ஒருமுறை தான் எந்திரிப்பா ! எந்திரிப்பா !!


இறுதி மரியாதை-ன்னு எல்லாரும் சொல்றாங்க ! ஆனா நான் உனக்கு ஒரு மரியாதையும் செய்யலியே!

குழந்தையா அழுவுறேன், வா, வந்து என்னை கொஞ்சி போப்பா!!

நீ என்னை பாத்துகிட்ட மாறி, என்னால உன்னை பாத்துக்க முடியலயே !!

கைமாறு என்ன செய்ய, கலங்கி மனம் தவிக்குதப்பா!!!

மனசு தான் ஏங்குது, என்ன மன்னிச்சிடுப்பா, மன்னிச்சிடுப்பா!!!





இழந்துட்டு தவிக்கிறவன் சொல்றேன் , இருக்கும் போதே இளகிடுங்க.. 

விட்டுட்டு வாடுறவன் சொல்றேன், விழும் முன்னே தாங்கிடுங்க.. 

படிப்பினை வந்த பின்னே, பாசந்தான் பொங்குதப்பா !

அப்பா ஒன்னோடு உறவாட, நெதமுந்தான்  மனசு விம்முதப்பா!!


-  தஞ்சையின் அரச குமாரன் 

15-05-2023

பி. கு. : என் அப்பா இன்றும் நலமாக உழைத்து சம்பாதித்து கொண்டிருக்கிறார். யாரும் தவறாக எண்ண வேண்டாம்.

Monday, May 15, 2023

பேச்சுப் போட்டியும் லெடி டீச்சரும்

 2002 ஆம் ஆண்டு. 6 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறோம். 

மிகவும் சுறுசுறுப்பாக, உயரம் குறைவாக இருப்பார் லெடி டீச்சர்.  கணக்கு, ஆங்கிலம், அறிவியல் ஆகிய மூன்று பாடத்திற்கும் அவரே ஆசிரியர், வகுப்பு ஆசிரியை. 

டீச்சரின் கையழுத்து மிகவும் அழகாக இருக்கும். லெடி டீச்சர் வகுப்பு என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அவரின் ஆங்கில புலமை அற்புதம். எனக்கெல்லாம் ஆங்கில மோகம் ஏற்பட அவரே வித்திட்டவர். 

அவர்களின் வீடு மானம்பு சாவடி அருகில் இருக்கும் ரொட்டி கடைத் தெருவை தாண்டி இருக்கும். அவ்வப்போது அவர்களின் வீட்டிற்கும் செல்வது உண்டு. அப்போது என்னிடம் மிதிவண்டி இல்லை. நானும் நண்பர் விவேக்கும் அவர் சைக்கிளில் செல்வோம். அப்போது எல்லாம்  கையை விட்டு விட்டு  ரேஞ்சர் சைக்கிள் ஓட்டுவதெல்லாம் ஹீரோயிசத்தின் உச்சம். 

                                                         

சைக்கிள் காரியரில் ஓசியில் உட்கார்ந்து வரும் எனக்கு அல்லு விடும், ஆனால் விவேக்கோ இரண்டு கைகளையும் விட்டு விட்டு தலைக்கு தலையணையாய் வைத்துக் கொண்டு, நான் பயப்படுவதைப் பார்த்துப் பரவசப் படுவார். 


பள்ளியில் பேச்சுப் போட்டிக்கு நாள் குறிக்கபட்டது. பிரபாகரன், பவுன் போன்றோரின்  மைதானம் பேச்சுப் போட்டி. 6 வது E பிரிவிலிருந்து யாரும் பங்கெடுக்க யாரும் முன்வரவில்லை. பார்த்தார் லெடி டீச்சர். களத்தில் இறங்கினார். கிட்டத் தட்ட இரண்டு பக்கம். முழுதும் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினார். அவரே எனக்கு முழுதும் பயிற்று வித்தார்.  இது மிகப் பெரிய விடயம்.



ஒரு கணம் எண்ணிப் பார்க்கிறேன். பாடம் தான் நடத்தி விட்டோமே என்றிருக்கலாமே! எதற்கு இந்த மெனக்கெடல்? யார் கேட்க போகிறார்கள்? ஆங்கிலம் வேறு. அவர் மட்டுமே சொல்லிக் கொடுத்தாக வேண்டும். வெளியில் வழியில்லை. ஆகச் சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே ஒரு நல்ல சமூகம் இங்கே படைக்கப் படுகிறது. அற்பணிப்பு - ஆம், இதை கட்டாயம் இவ்வாறு தான் சொல்ல முடியும். ஏக இறைவனின் பேரருள் எப்போதும் அவர்க்குண்டு. 

" நான் பேசியதோ உரை,

அதில் இருக்கலாம் சில குறை,

மன்னிப்பது உங்கள் முறை,

மீண்டும் வருவேன் அடுத்த முறை. "

என்றவாறே தன் பகுதியை நிறைவு செய்தார் நண்பர் திரு.பிரபாகரன். அவரது புடைத்த நரம்புகள் அடங்க சிறிது நேரம் பிடித்தது.

இன்னொரு புறம், நண்பர் திரு. பவுன் சீனி வாசன், தன் பங்கிற்கு மணித்துளிகளைக் கூட எண்ணாமல் வியர்வைத் துளிக் கொண்டு தன் பேச்சை முடித்தார். எப்போதும் உதவும் கைக்குட்டை அன்றி அன்று அவருக்கு துண்டு தேவைப் பட்டது.

அடுத்து நான்,

"Good evening to one and all gathered here!"

என்ற முதல் வரியை முடிக்கும் முன்னே ஒரு வழி ஆனேன். சொதப்பல். பேச்சுப் போட்டி முடிந்த பின்னும் எனது நடுக்கம் குறைய கொஞ்சம் நேரம் ஆனது.

ஆனால் மாறாக பரிசளிப்பு விழாவின் போது எனது பெயர் அறிவிக்க பட்டது. அப்போது அவர்களின் ஆறாவது வகுப்பாசிரியாக திரு. ரெக்ஸி சார் இருந்தார். பின்பு சமாதானம் பேசப்பட்டு பரிசாக தரப்பட்ட டிபன் பாக்ஸ்-ஐ தந்து விட்டேன். ஆனால் இன்றும் அந்த நிகழ்வை மறக்க விடாத பரிசு சான்றிதழ் என்னிடம் இருக்கிறது.


#நெகிழ்வு_பதிவுகள்

-  தஞ்சையின் அரச குமாரன் 






Sunday, May 14, 2023

மூன்றாம் வகுப்பு - செல்வராணி டீச்சர்

 அப்போது நாங்கள் மூன்றாம் வகுப்பிற்கு வந்திருக்கிறோம்.

தரை சீட்டிலிருந்து பெஞ்சுக்கு மாறிய நேரம். கற்பலகை(சிலேட்), கற்பலகை குச்சியில் இருந்து நோட்டு பென்சிலுக்கு தாவின எங்களது சிறு விரல்கள்.

திருமதி. செல்வ ராணி ஆசிரியை எங்களுக்கு அப்போது வகுப்பாசிரியராக இருந்தார். எங்கள் வகுப்பு ஆண்கள் ஆசிரியர் ஓய்வறைக்கு அருகே அமைந்திருந்தது.

எங்களை அ, ஆ மற்றும் உயிர்மெய் எழுத்துக்களை நோட்டில் எழுதுமாறு பணித்தார். அனைவரும் எழுதினோம். ஆசிரியர் ஒவ்வொருவர் நோட்டாக பார்த்து கொண்டே வந்தார். அப்போது நண்பர் மணி கண்ட பிரபு நோட்டையும் எனது நோட்டையும் பார்த்து விட்டு எழுத்து அழகாக உள்ளது என்று கூறினார். அத்தோடு நிற்காமல் அனைத்து ஆசிரியர்களிடமும் எங்கள் நோட்டை காண்பித்து, "பாருங்கள் எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்கள்" என்று பரப்புரையே செய்து விட்டார்.

அன்று அவர் செய்து வைத்த அந்த ஊக்க துவக்கம், இன்று வரை எங்களை ஓட வைக்கின்றது.

அவர் அடுத்த வகுப்பிற்கு சென்று வருவதற்க்குள் ஒரு வேடிக்கையும் நடந்து விட்டது. மற்ற மாணவர்கள் எனது நோட்டை பார்த்து எழுதி கொண்டிருந்தார்கள். அப்போது சிலர் எனது எழுத்து சரியாக தெரியவில்லை என கூற, நானோ மேல் எழுதி, மேல் எழுதி, நோட்டை ஒரு வழி ஆக்கிவிட்டேன். திரும்ப வந்து திருமதி. செல்வ ராணி ஆசிரியை என்னை கடிந்து கொண்டது இன்றளவும் என்னை விட்டு அகல வில்லை.

எனது திருமண விழாவில் அதே திருமதி. செல்வ ராணி ஆசிரியை அவர்களும், தமிழம்மா திருமதி. ஸ்டெல்லா ஆசிரியை அவர்களும் வந்திருந்து கலந்து கொண்டது நெகிழ்ச்சியின் உச்சம்.

#நெகிழ்வு_பதிவுகள்

- இராஜ் குமார் பக்தவச்சலம்



பவுனின் குழந்தை உள்ளம்

கட்டாயம் அப்போது நான் ஐந்தாம் வகுப்பிற்கு கீழே படித்து கொண்டிருக்க வேண்டும்.

திரு. கலை மோகன் என்று ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருந்தார். அன்பானவர். முன் வரிசையில் ஒரு பல் அவருக்கு பூச்சி பல்லாக இருக்கும் என்று நினைவு.

1. அப்போது வெள்ளி கிழமை தோறும் முதல் வகுப்பு உடற்கல்வி வகுப்பாக இருக்கும். எனவே அவர் வருகையை பதிவு செய்து விட்டு பின் கிடைக்கும் சொற்ப மணித்துளிகளே எங்களுக்கு விளையாட கிடைக்கும். அதிலும் அவர் ஒரு வித்தியாசமான முறையை கையாள்வார். ஒவ்வொரு பெயருடனும் ஏதேனும் ஒரு பெயரை விளையாட்டாக இணைத்து அழைத்து வருகையை பதிவார்.

உதாரணமாக...

ஆசை தம்பி என்பதை "ஆசை தம்பி தோசை கொண்டா" என்பார்.

பிரதாப் என்பதை "பிரதாப் போத்தன்" என்பார்.

முழு வகுப்பும் அவர் அழைக்கும் தொனி கண்டு ரசிக்கும் மகிழும். இவை அனைத்தும் ABCD மரம் (புங்க மரம்) அருகில் நடக்கும்.




2. அடுத்து அனைவரும் விளையாட ஆயத்தம் ஆவோம். ஒரு கால்பந்து. இருவர் இருவராக விளையாட வேண்டும். நடு மைதானத்தில் பந்து வைத்து இருவரில் யார் கோல் அடிக்கிறார்களோ அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்.

துயர நிலை என்னவென்றால் இருவரில் யாரேனும் ஒருவர் நாட் கோல் அடித்தால் இருவரும் தகுதி நீக்கம் பெறுவார்கள்.

எனக்கு பவுன் சீனி வாசன் என்று ஒரு நல்ல நண்பர் உள்ளார். இன்றும் நட்பு பாராட்டுகிறவர். பெரும்பாலும் அவருடனே நான் விளையாட கூடும். அவர் நாட் கோல் அடிப்பதை வழக்கமா செய்வார், அடித்துவிட்டு மகிழ்ச்சி கொள்வார். அப்போது நான் கோபப்பட்டிருந்தாலும் இன்று நினைத்தால் என்ன இனிமை. சிறு பிள்ளை தனங்கள் தான் என்னே அழகு!



நம் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்க ஒரு மென்பொருள் இருந்தால், எவ்வளவு இனிதாக இருக்கும்...

# நெகிழ்வு பதிவுகள்.

-இராஜ் குமார் பக்தவச்சலம்.



காது புடி வாத்தியார்

 காது புடி வாத்தியார் என்று பயத்துடன் அழைக்கப்பட்ட சாலமன் அய்யாவின் காது பிடிக்கு தப்பிய காதுகளும் உண்டோ?

ஒருமுறை ஐந்தாம் வகுப்பில், வகுப்பு வேளையில் ஓசி tit bits தின்றதால் மாட்டி கொண்டேன்.

இன்னொரு முறை 7 ஆம் வகுப்பில் காப்பி அடித்ததிற்காக, நீ நான் என ஒருவரை ஒருவர் கை காட்ட முழு வகுப்பும் மாட்டி கொண்டு முழிக்க, முழு பள்ளிக்கும் பின் உதாரணம் ஆனோம்.

யப்பா காது, இன்னா வலி வலிக்கும்.

மறக்க முடியுமா அத்திருகு நாட்களை?






செல்லையா சாரும், நானும் - பகுதி 1

 8 ஆம் வகுப்புக்கு அவரே எங்கள் வகுப்பாசிரியர் அப்போது அவரே கீழவாயில் பிரிவிற்கு உதவி தலைமை ஆசிரியரும் கூட. அவர் அன்புக்கு பாத்திரமாக நேர்ந்தது.

தலைமை ஆசிரியர் அறையில், அநேக நாட்கள் அவருடனே மதிய உணவு உண்பேன். மன்னிக்கவும் அவருடைய மதிய உணவை உண்பேன், ஏன் என்றால் அப்போது பெரும்பாலோனோர் சத்துணவு வாசிகளே.

கடலை எண்ணெய் சமையல். சுவைக்கு பஞ்சமிருக்காது.

அவர் வீட்டிலிருந்து உணவு எடுத்து வராத நேரங்களில் வஹாப் கடையில் பரோட்டோ வாங்குவது வழக்கம்.

அப்போதும் எனக்கும் 2 பரோட்டோ வாங்கி தருவார்.

அவர் அன்பு விசித்திரமானது...

தாக்கம் 1:

என் நெருங்கிய வட்டம், என்னை ஏன் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி கொண்டாய் என்று கேட்கும் போதெல்லாம், செல்லையா சார் என்னுள் வந்து அவர்களிடத்தில் இவ்வாறு சொல்லி செல்வார்.

"Eleven fools are playing and Eleven thousand People are watching".

- அரச குமாரன் பக்தவச்சலம். (இராஜ் குமார் பக்தவச்சலம்)



செல்லையா சாரும், நானும் - பகுதி 3

 அறிவியல் கண்காட்சி:

பள்ளி நாட்களில் அறிவியல் கண்காட்சியை அறியப்படாதோர் இருக்க வாய்ப்பில்லை. 2004 ஆம் ஆண்டிற்கான அறிவியல் கண்காட்சி வடக்கு வாசலில் உள்ள மெயின் பிரான்ச் ஸ்கூலில் நடக்க விருந்தது.

செல்லையா சாரின் தலைமையில் நாங்கள் இரு தயாரிப்பு என முடிவெடுத்தோம். ஒன்று காற்றாலை மின்சார மாதிரி. மற்றொன்று சொந்த FM ஸ்டேஷன். காற்றாலை மின்சார மாதிரிக்காவது ஒரு யோசனை இருந்தது. FM ஸ்டேஷன் எல்லாம் கண்ணை கட்டி காட்டில் விட்ட கதை தான். செல்லையா சார் தான் எல்லாம்.



தேவையான அனைத்து பொருட்களையும் தஞ்சையின் எலக்ட்ரானிக்ஸ் ஹப் ஆன தெற்கு வீதியில் வாங்கினோம். கிட்ட தட்ட இரண்டு வாரங்கள். இரு குழுக்களாக தினசரி வகுப்பு முடிந்ததும் இரவு 9 மணி வரை இதற்கான வேலையில் இருப்போம். FM ஸ்டேஷன் எல்லாம் வேற லெவல். நாங்கள் நேரடி ஒளிபரப்பில் பேசியதை எல்லாம் FM ஸ்டேஷன் வாயிலாக கேட்டதை எல்லாம் முடியாது மறக்க...

ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு கண்டுபிடிப்புகளுடன் மெயின் ஸ்கூலுக்கு சென்றோம். அறிவியல் கண்காட்சியை அப்போதைய தஞ்சையின் ஆட்சியர் திரு. இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப,(இன்றைய சுகாதார துறை முதன்மை செயலர்) வந்து பார்வையிட்டதாக ஒரு ஞாபகம்.


தொடர்ந்து தினத்தந்தி செய்தி இதழில் இருந்து வந்து புகைப்படமும் பேட்டியும் எடுத்தார்கள். செய்தி தாளில் நம் போட்டோ வருவதெல்லாம் அலாதி சுகம். என்னவாக விரும்பாதாக கேட்ட கேள்விக்கு கப்பல் படை மாலுமி என்றேன். சிரிப்பு. நானோ இன்று வரை பூங்காக்களில் உள்ள மிதிபடகை விட வேறெதிலும் சென்றதில்லை.



திரும்பி வந்த ஆட்டோவில் ஆட்டோ டிரைவர் செல்லையா சாரிடம் பேசி கொண்டே வந்தார். அவர் கேட்கும் கேள்விக்கெல்லாம் செல்லையா சாரின் பதில் வியப்பளித்தது. வடக்கு வீதியில் தொடங்கிய இந்த பேச்சு வெள்ளை பிள்ளையார் கோவில் வரை தொடர்ந்தது.


ஒவ்வொரு முறை அவர் பதில் சொல்லி முடித்த பின் நானோ "சார் நீங்க எங்கயோ போய்ட்டிங்க!" என்றவாறே பட வசனத்தை அள்ளி தெளித்துக் கொண்டிருந்தேன். அதற்கு அந்த ஆட்டோ டிரைவர்-ம் "சார் எங்கயும் போல இங்க தான் இருக்காரு" என்றவாறே வந்தார். ஆம் உண்மை தான். நம் செல்லையா சார் நம்மை விட்டு எங்கும் போகவில்லை, நாமாக நமக்காக நம்முடனே வாழ்ந்து கொண்டே இருப்பார்.




உப்பு மாங்காய்

சுருக்குப்பை கிழவி. சுருக்கங்கள் சூழ் கிழவி. பார்க்கும் போதெல்லாம் கூடையுடனே குடியிருப்பாள். கூடை நிறைய குட்டி குட்டி மாங்காய்கள். வெட்டிக்க...