Sunday, May 14, 2023

செல்லையா சாரும் நானும் - பகுதி 2

அலுவலக அரசியலை (Office Politics) நான் அறிந்திராத காலம் அது.

நண்பர்களுக்கு தோட்ட வாத்தியார் மோகன்ராஜ் சாரும், ஓவிய ஆசிரியர் பெஞ்சமின் அவர்களையும் நினைவிருக்கலாம்.

செல்லையா சாரை வெகுவிற்கு பிடித்த அதே சமயம், சிலர் அவர் மீது கருத்து முரண் கொண்டிருந்ததும் இயல்பே.

ஆங்கிலம் ஒரு அருமையான மொழி என்று அடிக்கடி செல்லையா சார் சொல்லுவார். உண்மையில் எனக்கு ஆங்கிலத்தில் ஒரு மிகை ஆர்வம் ஏற்பட செல்லையா சாரும், 6 ஆம் வகுப்பு திருமதி லீதியால் ஆசிரியையும், 9 & 10 வகுப்புகளில் ஆங்கில ஆசிரியை திருமதி பிரேமா அவர்களும் காரணம்.

ஒரு நாள், ஓவிய வகுப்பின் போது, பெஞ்சமின் ஆசிரியர் அவர்கள், ஓவியத்தை விடுத்து, பேச்சு போட்டியின் நடுவரானார்.

"தமிழே! ஆங்கிலமே!" என்பதே தலைப்பு.

தமிழ் அணியில் நான் நிற்க, வாதத்திற்கு வலு சேர்க்க, வம்படியாக செல்லையா சாரின் பெயரை இழுத்தேன். "நாம் அனைவரும் தமிழ் மொழியை விரும்ப வேண்டும். ஆங்கிலம் ஆங்கிலம் என்று அதன் பின்னால் செல்ல கூடாது" என்றேன். இதற்கு ஓர் வழியில் தமிழம்மா திருமதி ஸ்டெல்லா அவர்களும் காரணம். தமிழ் மொழி உச்சரிப்பில் அசத்துவார். வாசிப்பில் எங்கு நிறுத்த வேண்டும், எங்கு தொடர வேண்டும் என்பதை என்னுள் இறக்கியர் அவரே.

இன்றைய இணையத்தை விட மின்னல் என பாய்பவர்கள் என் நண்பர்கள். நான் வகுப்பறைக்கு திரும்பும் முன்னே, இந்த செய்தி புரவி அன்ன விரைந்து பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. செல்லையா சாரின் அதீத அன்பைப் பெற்றேன். ஆம். கிட்ட தட்ட ஒன்றரை மாதங்கள் அவரது வகுப்புகளில் வெளியே நின்றேன். அழுகை வரும். இருப்பினும் எப்போது அவர் என்னிடத்தில் முன்பு போல் நடந்து கொள்வாரா என்று ஏங்கலானேன். மீண்டும் என்னிடம் அன்பு பாராட்ட தொடங்கினார். ஊடல் என்பதற்கு தமிழில் பொய்ச்சினம் என்றும் ஒரு பொருள் உண்டு.

ஆரவாரம் :

~~~~~~~~~

கால்பந்து மைதானத்தின் நடுவே, அடிக்கடி ஆசிரியர்களும் பெற்றோர்களும் செல்வது தவிர்க்க முடியாதது. செல்லையா சார் சென்றால் அவர் எங்களிடம் பந்தை வாங்கி வானுயர அடிப்பது வழக்கம். அப்போது எங்களது ஆர்பரிப்பை கீழ வாசல் சாலையில் செல்பவர்கள் ஒதுக்கி விட முடியாது. உண்மையில் சில சமயம் அவர் அடிக்க மறுப்பார். நாங்கள் அடம் பிடித்து அடிக்க சொல்வோம். இனி ஒருபோதும் அக்காலம் திரும்பி வராது.

தலைமுறை தாண்டிய அன்பு

-----------------------------------

என் தந்தையிடம் செல்லையா சாரை பற்றி பேசும் போதெல்லாம், அவர் "ரொம்ப நல்ல மனுஷன்டா அவரு" என்பார். கூடுதலாக செல்லையா சார், நான் ஸ்கூல் படிக்கும் போது எனக்கே கிளாஸ் எடுத்தவர்டா என்று தலைமுறை தொடர்ந்த அவரது பணியின் உன்னதத்தை உணர்த்துவார்.



(படத்தில் செல்லையா சாரின் பக்கத்தில் இருப்பவர் தோட்ட வாத்தியார் மோகன்ராஜ் சார்)

No comments:

Post a Comment

உப்பு மாங்காய்

சுருக்குப்பை கிழவி. சுருக்கங்கள் சூழ் கிழவி. பார்க்கும் போதெல்லாம் கூடையுடனே குடியிருப்பாள். கூடை நிறைய குட்டி குட்டி மாங்காய்கள். வெட்டிக்க...