பேச்சுப் போட்டியும் லெடி டீச்சரும்
2002 ஆம் ஆண்டு. 6 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறோம்.
மிகவும் சுறுசுறுப்பாக, உயரம் குறைவாக இருப்பார் லெடி டீச்சர். கணக்கு, ஆங்கிலம், அறிவியல் ஆகிய மூன்று பாடத்திற்கும் அவரே ஆசிரியர், வகுப்பு ஆசிரியை.
டீச்சரின் கையழுத்து மிகவும் அழகாக இருக்கும். லெடி டீச்சர் வகுப்பு என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அவரின் ஆங்கில புலமை அற்புதம். எனக்கெல்லாம் ஆங்கில மோகம் ஏற்பட அவரே வித்திட்டவர்.
அவர்களின் வீடு மானம்பு சாவடி அருகில் இருக்கும் ரொட்டி கடைத் தெருவை தாண்டி இருக்கும். அவ்வப்போது அவர்களின் வீட்டிற்கும் செல்வது உண்டு. அப்போது என்னிடம் மிதிவண்டி இல்லை. நானும் நண்பர் விவேக்கும் அவர் சைக்கிளில் செல்வோம். அப்போது எல்லாம் கையை விட்டு விட்டு ரேஞ்சர் சைக்கிள் ஓட்டுவதெல்லாம் ஹீரோயிசத்தின் உச்சம்.
சைக்கிள் காரியரில் ஓசியில் உட்கார்ந்து வரும் எனக்கு அல்லு விடும், ஆனால் விவேக்கோ இரண்டு கைகளையும் விட்டு விட்டு தலைக்கு தலையணையாய் வைத்துக் கொண்டு, நான் பயப்படுவதைப் பார்த்துப் பரவசப் படுவார்.
பள்ளியில் பேச்சுப் போட்டிக்கு நாள் குறிக்கபட்டது. பிரபாகரன், பவுன் போன்றோரின் மைதானம் பேச்சுப் போட்டி. 6 வது E பிரிவிலிருந்து யாரும் பங்கெடுக்க யாரும் முன்வரவில்லை. பார்த்தார் லெடி டீச்சர். களத்தில் இறங்கினார். கிட்டத் தட்ட இரண்டு பக்கம். முழுதும் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினார். அவரே எனக்கு முழுதும் பயிற்று வித்தார். இது மிகப் பெரிய விடயம்.
ஒரு கணம் எண்ணிப் பார்க்கிறேன். பாடம் தான் நடத்தி விட்டோமே என்றிருக்கலாமே! எதற்கு இந்த மெனக்கெடல்? யார் கேட்க போகிறார்கள்? ஆங்கிலம் வேறு. அவர் மட்டுமே சொல்லிக் கொடுத்தாக வேண்டும். வெளியில் வழியில்லை. ஆகச் சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே ஒரு நல்ல சமூகம் இங்கே படைக்கப் படுகிறது. அற்பணிப்பு - ஆம், இதை கட்டாயம் இவ்வாறு தான் சொல்ல முடியும். ஏக இறைவனின் பேரருள் எப்போதும் அவர்க்குண்டு.
Comments
Post a Comment